2023 அக்டோபர் 7 அன்று தேனியில் மாநிலத்தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற தமுஎகச மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று பீற்றிக்கொண்டே ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றான ஊடகங்களை ஒடுக்கிவருவது தொடர்பாக மோடி அரசு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுவருகிறது. ஆனாலும் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பறிப்பதில் ஒன்றிய அரசு மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது மாற்றுக்கருத்தினை வெளிப்படுத்துகிற, கூர்மையாக விமர்சிக்கிற ஆளுமைகள் மீதும் ஊடகங்கள் மீதும் அமைப்புகள் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஒடுக்கும் இழிநிலை தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் நியூஸ் க்ளிக் இணைய இதழை முடக்குவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. கைது செய்யப்பட்டுள்ள நியூஸ் க்ளிக் ஆசிரியரை உடனே விடுவிப்பதற்கும், இதழை மீண்டும் சுதந்திரமாக வெளியிடும் சூழலை உருவாக்குவதற்கும் குரலெழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
2. எழுபதாண்டுகளுக்கு முன்பு “மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வி” என்கிற பெயரால் குழந்தைகளை குலத்தொழிலுக்கு விரட்டும் திட்டம் ராஜாஜியால் கொண்டுவரப்பட்டதென்றால் இப்போதைய ஒன்றிய அரசு 18 வயது நிரம்பியவர்களை குலத்தொழிலுக்கு விரட்டுவதற்கு “விஸ்வகர்மா யோஜனா” என்கிற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 18 வகையான குலத்தொழில்களைச் செய்யும் குடும்பங்களிலிருந்து படித்து உயர்கல்விக்குச் செல்வதற்கு தகுதி படைத்தவர்களை படிக்க அனுப்பாமல், பயிற்சியும் கடனும் கொடுத்து அவர்களது குலத்தொழிலுக்கு திருப்பியனுப்புகிற இந்தத் திட்டம், சாராம்சத்தில் சாதியப் படிநிலைகளுக்கேற்பவே தொழில்களையும் பணிகளையும் ஒதுக்கும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டிற்கு இசைவானது. வர்ணாஸ்ரமக் கோட்பாட்டினை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தால் பெண்களும் அடித்தட்டு மக்களும் நவீன வாழ்க்கைமுறையை நோக்கி அடைந்துவரும் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் இந்தக் கொடுந்திட்டத்தை ஒன்றிய கைவிட வேண்டும் என்று தமுஎகச கோருகிறது.
3. பல்வேறு தருணங்களில் கண்டனத்திற்குள்ளான போதும் எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் முடிவுக்கு வந்தபாடில்லை. சமீபத்தில், மும்பை ஐஐடியில் பொதுவாக உள்ள உணவகப்பகுதியில் “தாவர உணவு” உண்போர் மட்டுமே அமர்வதற்கென தனியாக மேசைகள் ஒதுக்கப்பட்டு அவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாதென தடுக்கப்பட்டுள்ளனர். “இறைச்சி உணவு” உண்போர் மீதான இந்தத் தீண்டாமையை கடைபிடிப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டத்தொகை விதித்துள்ள மும்பை ஐஐடி நிர்வாகத்தின் போக்கினை தமுஎகச கண்டிக்கிறது. மேலும், உணவகத்தில் நிலவும் தீண்டாமைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோருகிறது.
4. மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்குகளை கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
வாழ்த்துகளுடன்,
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்