19 Sept 2023

நூற்றாண்டு காணும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களைப் போற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தமுஎகச வரவேற்பு
 

19.09.2023
 

“தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து” என்று தமிழ்ச்சமூகத்திற்கு தன்னை ஒப்பளித்த கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21 அன்று பிறந்தவர். நாளை மறுதினம் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. பாரதி, பாரதிதாசன், பெரியார், ஜீவா ஆகியோரின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டு கலை இலக்கியத்தளத்திலும் அரசியலிலும் தீவிரமாக பங்காற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி. விடுதலைக்கு முந்தைய காலனிய இந்தியாவிலும் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவிலும் வாழ்ந்த தமிழ்ஒளி தம் காலத்தின் அடித்தட்டு மக்களது வாழ்வியல் அவலங்களையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான அவர்களது எத்தனங்களையும் தனது இலக்கிய ஆக்கங்களில் முதன்மைப்படுத்தினார். சிறுகதை, குறுநாவல், நாடகம், காவியம், திரையிசைப் பாடல் என பன்முகப்பட்ட வடிவங்களிலும் இயங்கிய தமிழ்ஒளியின் படைப்புலகம் சாதியத்திற்கும் அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் எதிரானது. குழந்தைகளுக்காக  அவர் எழுதிய கதைகளும் பாடல்களும் இயற்கையை, மனித உழைப்பை, சமத்துவத்தை, அறவொழுக்கத்தை, அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டாடக்கூடியவை. மே தினத்தையும் சீனப்புரட்சியையும் வரவேற்று அவர் எழுதிய கவிதைகளும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் வெளிவந்த முன்னணி என்ற இதழில் வெளியான அவரது எழுத்துகளும் உழைப்பாளி மக்களால் என்றென்றும் போற்றத்தக்கவை. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானபோது அவ்வமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் தமிழ்ஒளி. 
 
“தூக்குக்கயிற்றினைத் தொட்டிழுத்தாலும் துளியும் அஞ்சாதே! ஒளியிலா நாட்டில் ஒளியினைப் பாய்ச்சு” என்று அநீதிகளுக்கெதிராக போராடத் தூண்டிய தமிழ்ஒளியை தனது ஐம்பெரும் ஆளுமைகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ள தமுஎகச, தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை நூறு இடங்களில் நடத்துகிறது. கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துவருகிறது. இதன் தொடர்ச்சியில்தான் தமிழ் ஒளியின் நூற்றாண்டை அரசு விழாவாக நடத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இப்போது தமிழ்நாடு அரசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையினை அமைக்க முன்வந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்ச்சமூகத்திற்கு கலை இலக்கியம் வழியே மதிப்பார்ந்த பங்களிப்பினைச் செய்துள்ள கவிஞர் தமிழ் ஒளி அவர்களைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இவ்வறிவிப்பினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது.
 
அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்          
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்