அறிமுகம்

காலத்தின் குரலாக . .

தமுஎகச நடந்து வந்த பாதையை இந்த நாற்பபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின் திரும்பிப் பார்க்கும்போது பெருமிதத்தில் மனம் விம்முகிறது.

கருத்துரிமையின் குரல்வளை நெறிக்கப்பட்ட எமர்ஜென்சி காலத்தில் கருத்துரிமை காக்கவென்றே பிறந்த இந்த இயக்கம் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்திலும் இந்த நாட்டிலும் தமிழகத்திலும் நடைபெறுகின்ற அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை உற்று நோக்கி, மக்களைப் பாதிக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் எதிர்வினை ஆற்றி, தேவைப்படும்போதெல்லாம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அணி திரட்டிக் களத்தில் இறங்கிப் போராடித் தன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

அதே சமயம் இது ஒரு போராடும் அமைப்பு என்கிற அடையாளத்தோடு மட்டும் நின்று விடாமல், முற்போக்கான படைப்புக்களை முன் வைக்கும் படைப்பாளிகளின் படைவரிசை என்கிற முகத்தோடு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளது.

 இளம் படைப்பாளிகளை உருவாக்கும் பட்டறையாகவும் பாசறையாகவும் தன் பணிகளை தமுஎகச தொடர்ந்து வடிவமைத்து வந்துள்ளது. இந்த நாற்பதாண்டு காலம் முழுவதிலும் பயிலரங்குகளும் பயிற்சி முகாம்களும் எனத் திட்டமிட்டுத் தன் காலடிகளை எடுத்து வைத்துள்ளது.

முற்றிலும் கருத்தியல் தளத்தில் இயங்கும் அமைப்பு என்கிற நிலையில் தமுஎகச தன் முகம் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூவரையும் முன்னிறுத்தும் போது தன் உள்ளத்தில் வியாபித்திருக்கும் ஒளியாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம் என்கிற மூன்று சிந்தனை போக்குகளையும் பொத்திப் பாதுகாத்து வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. அந்த ஒளிக்கீற்றுகள் தரும் வெளிச்சத்திலேயே தன் படைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

படைப்பாளிகள் என்பவர்கள் இச்சமூகத்தின் மனச்சாட்சி என்கிற கருத்தில் உறுதியாக நின்று சமரசமின்றி வினையாற்றும் இயக்கமாகத் தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது. விமர்சனம் சுய விமர்சனம் என்கிற இரண்டையும் தனக்கான உரைகற்களாகக்கொண்டு சதா தன்னைத்தானே உரசிப்பார்த்து, சரி செய்து கொண்டு வளரும் அமைப்பாக இது திகழ்கிறது. ஆகவேதான், தன் மீது வீசப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளி, விமர்சனங்களைப் பொக்கிஷமாகக் கருதி உள்வாங்கித் தன பயணத்தைத் தொடர்கிறது.


தனி நபருக்கு மேலாக அமைப்பையும் சமூகத்தையும் வைத்து சிறுபான்மைக் கருத்துக்கு உரிய மதிப்பளித்து, பெரும்பான்மை முடிவைச் செயலாக்கும் நடைமுறையைத் தனதாகக் கொண்டு இயங்குகிறது. தத்துவமும் நடைமுறையும் தன் பயணத்தின் இரு தண்டவாளங்கள் என்கிற ஓர்மையுடன் தமுஎகசவின் பயணம் தொடர்கிறது.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் படைப்பு சார்ந்த தனித்தனிக் கனவுகள் இருக்கும். தனித்தனிப் பாதை இருக்கும் என்பதை முழுமையாக அங்கீகரித்து சமூகத்துக்காகக் கூடிக் கனவுகாணும் புள்ளியாக தமுஎகசவைப் புரிந்து கொண்டு ஆழமும் அடர்த்தியும் சமூக அக்கறையும் மிக்க எங்கள் மகத்தான படைப்பாளிகளின் படைப்புகளை சமூகத்தின் முன் வைக்கிறோம். எங்கள் படைப்பாளிகள் என தமுஎகச கருதுவது, எப்போதும் தமுஎகசவின் உறுப்பினர்களாக இருக்கும் படைப்பாளிகளை மட்டுமல்ல. இந்த அமைப்புக்கு வெளியில் இருந்தாலும் சமூகப் பொறுப்புணர்வுடன் உள்ளடக்கத்துடன் உயிர்ப்புடன் தம் படைப்புகளைத் தருகின்ற ஒவ்வொரு படைப்பாளியும் நம்மவர் என்கிற தோழமை உணர்வுடன் தொடர்கிற ஜனநாயகப் பாதையே தமுஎகசவின் பாதை. அதே சமயத்தில் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் சக்திகளோடு சமரசமற்ற போரை நடத்தும் மன உறுதியுடன் முன்னோக்கிப் பயணிக்கிறோம்

கத்தி முனைதனிலே பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை நாம்
தட்டி முழக்கிடுவோம்!
ஊரை எழுப்பிடவே துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவோம்
தமிழ்ச்சாதி விழித்திடவே!
- கவிஞர் தமிழ் ஒளி

(”காலத்தின் குரல்” (அருணன், ச.தமிழ்ச் செல்வன்) தமுஎகச வின் நாற்பதாண்டு வரலாற்று நூலில் இருந்து. . )