விடுதலைப்போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி செம்மலர் இலக்கிய ஏட்டினைத் தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். செம்மலரில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் 34பேர் 1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23,24 தேதிகளில் மதுரையில் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தனர். இந்தக் கூட்டத்தில், தமிழக பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்லசிவன், கே.முத்தையா ஆகியோரோடு தோழர் என்.சங்கரய்யாவும் பங்கேற்று முற்போக்கு எழுத்தாளர்களுக்கு என்ற ஓர் அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். 1975ஆம் ஆண்டு ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமுஎச முதல் மாநாட்டில் பங்கேற்று தோழர் சங்கரய்யா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “கடந்த காலத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் அழிந்ததுபோல், இது அழிந்துவிடக்கூடாது என்றார்கள். இது அப்படி அழியாது. ஏனென்றால், இதற்கு தெளிவான கொள்கை அடிப்படை உண்டு” என்று முழங்கினார். முதல் மாநாட்டில் அவர் கூறியதுபோல, தமுஎகச தமிழகத்தின் மிகப்பெரும் கலை, இலக்கிய பண்பாட்டு அமைப்பாக உயர்ந்தோங்கி வளர்ந்து நிற்பது கண்டு அவர் பேருவகை கொண்டார்.
தமுஎகச நடத்திய பல்வேறு மாநில மாநாடுகளிலும், பயிலரங்குகளிலும் பங்கேற்று அவர் ஆற்றிய உரை தமுஎகச வளர்ச்சிக்குத் தடம் வகுத்து கொடுத்தது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற தமுஎகசவின் 15-வது மாநில மாநாட்டின் போது நாட்டு விடுதலையின் பவள விழாவையும் இணைத்துக் கொண்டாடினோம். இந்த மாநாட்டில், ஆக.14 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாநாட்டில் ஏற்றப்படும் தேசியக்கொடியை தோழர் சங்கரய்யா எடுத்துக் கொடுத்தார். அவரால் எடுத்தளிக்கப்பட்ட அந்தக் கொடியே தமிழகம் முழுவதும் பயணித்து மாநாட்டில் ஏற்றப்பட்டது. இவ்வாறாக தமுஎகசவின் அனைத்து நிகழ்வுகளிலும் தம்மை அவர் நெருக்கமாக பிணைத்துக் கொண்டிருந்தார்.
சங்ககால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருந்த அவர், முற்போக்கு படைப்பாளர்களின் படைப்புகளை உடனுக்குடன் படித்து அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான அவர், தன்னுடைய உரைகள் அனைத்திலும் நம்பிக்கை விதைகளை விதைத்து வந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட உருவாக்கத்தின் போது அவர் நிகழ்த்திய உரைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கித் தந்த ஆதி விதைகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவுக்கு அமைப்பின் விழுதுகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றன. சமநீதி, சமூக நீதி, படைப்பதற்கான பயணத்தில் தோழர் சங்கரய்யாவின் குரல் என்றென்றும் நம்மை வழிநடத்தும். தோழர் சங்கரய்யாவுக்கு வீரவணக்கம்.
தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்.
15.11.2023