Showing posts with label தீர்மானங்கள். Show all posts
Showing posts with label தீர்மானங்கள். Show all posts

10 Oct 2023

தமுஎகச மாநிலச்செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்


2023 அக்டோபர் 7 அன்று தேனியில் மாநிலத்தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற தமுஎகச மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 

1. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று பீற்றிக்கொண்டே ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றான ஊடகங்களை ஒடுக்கிவருவது தொடர்பாக மோடி அரசு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுவருகிறது. ஆனாலும் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பறிப்பதில் ஒன்றிய அரசு மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது மாற்றுக்கருத்தினை வெளிப்படுத்துகிற, கூர்மையாக விமர்சிக்கிற ஆளுமைகள் மீதும் ஊடகங்கள் மீதும் அமைப்புகள் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஒடுக்கும் இழிநிலை தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் நியூஸ் க்ளிக் இணைய இதழை முடக்குவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. கைது செய்யப்பட்டுள்ள நியூஸ் க்ளிக் ஆசிரியரை உடனே விடுவிப்பதற்கும், இதழை மீண்டும் சுதந்திரமாக  வெளியிடும் சூழலை உருவாக்குவதற்கும் குரலெழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 

2. எழுபதாண்டுகளுக்கு முன்பு “மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வி” என்கிற பெயரால் குழந்தைகளை குலத்தொழிலுக்கு விரட்டும் திட்டம் ராஜாஜியால் கொண்டுவரப்பட்டதென்றால் இப்போதைய ஒன்றிய அரசு 18 வயது நிரம்பியவர்களை குலத்தொழிலுக்கு விரட்டுவதற்கு “விஸ்வகர்மா யோஜனா” என்கிற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 18 வகையான குலத்தொழில்களைச் செய்யும் குடும்பங்களிலிருந்து படித்து உயர்கல்விக்குச் செல்வதற்கு தகுதி படைத்தவர்களை படிக்க அனுப்பாமல், பயிற்சியும் கடனும் கொடுத்து அவர்களது குலத்தொழிலுக்கு திருப்பியனுப்புகிற இந்தத் திட்டம், சாராம்சத்தில் சாதியப் படிநிலைகளுக்கேற்பவே தொழில்களையும் பணிகளையும் ஒதுக்கும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டிற்கு இசைவானது. வர்ணாஸ்ரமக் கோட்பாட்டினை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தால் பெண்களும் அடித்தட்டு மக்களும் நவீன வாழ்க்கைமுறையை நோக்கி அடைந்துவரும் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் இந்தக் கொடுந்திட்டத்தை ஒன்றிய கைவிட வேண்டும் என்று தமுஎகச கோருகிறது. 

3. பல்வேறு தருணங்களில் கண்டனத்திற்குள்ளான போதும்  எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் முடிவுக்கு வந்தபாடில்லை. சமீபத்தில், மும்பை ஐஐடியில் பொதுவாக உள்ள உணவகப்பகுதியில் “தாவர உணவு” உண்போர் மட்டுமே அமர்வதற்கென தனியாக மேசைகள் ஒதுக்கப்பட்டு அவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாதென தடுக்கப்பட்டுள்ளனர். “இறைச்சி உணவு” உண்போர் மீதான இந்தத் தீண்டாமையை கடைபிடிப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டத்தொகை விதித்துள்ள மும்பை ஐஐடி நிர்வாகத்தின் போக்கினை தமுஎகச கண்டிக்கிறது. மேலும், உணவகத்தில் நிலவும் தீண்டாமைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோருகிறது.

4. மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்குகளை கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.   

வாழ்த்துகளுடன், 

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

4 Sept 2023

சனாதன ஒழிப்பு மாநாடு - தீர்மானங்கள்

சனாதன ஒழிப்பு மாநாடு


2023 செப்டம்பர் 2, காமராசர் அரங்கம், சென்னை


தீர்மானங்கள்


1. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை தொகுத்தெழுதிய மநுவின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வாய வளாகத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருப்பது அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும்.

2. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இயங்க வேண்டியவையே அரசு அலுவலகங்கள். எனவே அனைத்துவழிகளிலும் மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பது அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுகுறித்து தெளிவான அரசாணைகள் இருந்தும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, பூமி பூசை, புதிய கட்டிடத் திறப்புக்கு புண்ணியார்த்தனம், யாகங்கள், வார இறுதிப் பூசை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஒரு மதத்தின் சார்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியான பூசைகள் மூலம் பார்ப்பனியச் சடங்குகளின் பிடியில் அரசு அலுவலகங்கள் சிக்குண்டு கிடக்கின்றன. பெரும்பான்மையாக உள்ளவர்களின் மத நடவடிக்கைகள் இயல்பானவை என்கிற நிலையை உருவாக்குவது அரசியல் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. எனவே இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.

3. அரசு அலுவலக வளாகங்களுக்குள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டிடத்தையும் அரசு அலுவலகம் நிர்வாகிக்கக் கூடாது. புதியதாக எந்தவொரு வழிப்பாட்டுத்தலம் அமைப்பதையும் அனுமதிக்கக்கூடாது.

4. இறை நம்பிக்கை, மத ஈடுபாடு என்பவை குடிமக்களின் தனிப்பட்ட விருப்பம். அரசைப் பொறுத்தவரை மதச்சார்பற்றது. எனவே, மதம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அமைச்சர்களோ அரசு அலுவலர்களோ ஊழியர்களோ அவர்களுடைய பணிசார்நிலையில் கலந்து கொள்ளக்கூடாது. அனைத்து மக்களுக்குமான இவர்கள் தமது சொந்த சாதி அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுப்படுப்பதும் கூடாது.

5. வாழ்விடங்களும் வழிபாட்டிடங்களும் சாதி அடிப்படையில் பிரிந்திருப்பதைப் போலவே மயானங்களும் பிரிந்திருக்கின்றன. இந்தப் பிரிவினையின் காரணமாக சமரசம் உலாவும் இடம் எனச் சொல்லப்படும் மயானங்களிலேயே கடும் மோதல்கள் உருவாகின்றன. இந்நிலையைத் தவிர்க்க எல்லா ஊர்களிலும் பொது மயானம் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஊர் ஒரே சுடுகாடு/ இடுகாடு என்கிற நிலை எட்டப்பட வேண்டும். அதற்கான மன ஏற்பை வளர்க்க மக்களிடையே பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. சனாதனத்தின் கோரவடிவமான சாதியம் நீடித்திருப்பதன் முதன்மைக் காரணியாக இருப்பது அகமணமுறையாகும். நாட்டில் சாதி கலப்புத் திருமணம் மிகக்குறைவாக நடக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது கவலையளிக்கக் கூடியதாகும். சாதிய அமைப்புகள் தம் சாதி இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் வேறு சாதியினரை திருமணாம் செய்துகொள்ளமாட்டேன் என்று கோவிலில் வைத்து வெற்றிலைச் சத்தியம் வாங்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வாழ்க்கைத்துணையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்துவருகின்றன. சாதியாணவக்கொலைகள் மூலம் சாதி கலப்ப்பு/ மறுப்புத் திருமணத்தின் மீது அச்சம் உருவாக்கப்படுகிறது.

அகமண முறையை விட்டுவிடுதலையாகி வெளியேற விரும்புவோர் கைக்கொள்ளும் நடைமுறைதான் சாதிமறுப்புத் திருமணம். இதனைப் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பது மட்டுமின்றி வாடகைக்கு வீடுதர மறுப்பது உட்பட பல வகையில் புறக்கணிக்கும் நிலை உள்ளது. திருமணப் பதிவிலும் ஏராளமான இடையூறுகள், கடுமைகள். இவையெல்லாம் சாதியத்தைக் கெட்டிப்படுத்துவற்கான திட்டங்களே.

எனவே, சாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரின் அச்சம் அகற்றும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அரசே காதலர் புகலிடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை சாதி/சமய மறுப்பாளர் என அறிவித்து அவர்களின் குழந்தைகளுக்குக் கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்கி வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

7. குடும்பங்களில் தான் அதிகமும் பார்ப்பனியச் சடங்குகள் நடக்கின்றன. குடும்பங்களில் உரையாடி இச்சடங்குகளை நிறுத்தினாலே பார்ப்பனியத்தின் உயிர்நாடியான சடங்குகள் அழிந்துவிடும்.

8. பார்ப்பனியச் சடங்குகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு வாழ்க்கை நெறிகளையும் கொண்டாட்டங்களையும் உருவாக்குவதற்கு தமிழர் பண்பாட்டில் தோய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.

9. பெயர் சூட்டும் விழா பொதுவாக பார்ப்பனச்சடங்குகளின்றியே நடைபெறுகிறது என்றாலும் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத மயமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்ப்பெயர்களைச் சூட்ட வேண்டும்.

10. புதுமனை புகுவிழாக்களில் நடக்கும் கணபதி ஹோமம் என்ற பார்ப்பனச் சடங்கு வீட்டின் தீட்டைக் கழிக்கும் சடங்கு அனைத்து சாதியினரும் சேர்ந்து கட்டிய வீடு தீட்டுப்பட்டது என்று அந்த தீட்டை கழிக்கும் சடங்காகவே, புனிதப்படுத்தும் சடங்காகவே நடக்கிறது என்பதால் அந்த சடங்கைத் தவிர்த்து புதுமனை திறப்பு விழா என்று நடத்தலாம்.

11. பூப்புனித நீராட்டு விழா என்ற சடங்கினை நடத்த நடத்த வேண்டிய அவசியமே இல்லை. பெண்குழந்தைகள் பருவமடைவதை தீட்டாகப் பார்த்து தீட்டு கழிக்கும் இந்தப் பார்ப்பனியச் சடங்கினை கைவிட வேண்டும்.

12. இறப்புச் சடங்குகள் முழுக்கவும் இறப்பு என்கிற இயற்கை நிகழ்வை தீட்டு எனக் கருதி பார்ப்பனியச் சடங்கினால் புனிதப்படுத்தப்படுவதாக நடக்கின்றன. மரணம் தீட்டானதல்ல என்றும் உடல் தானம் செய்வதை ஊக்கப்படுத்தியும் பரப்புரை மேற்கொள்வதன் மூலம், இந்தச் சடங்குகளில் பெரும்பாலனவற்றை தவிர்க்க முடியும்.


13 Jul 2023

பிளவுவாத அரசியலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

பொது சிவில் சட்டம் பற்றி 12.07.2023 மாலை இணையவழியில் தமுஎகச மாநிலக்குழு நடத்திய தெளிவரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு பன்மைத்துவ இந்தியா எனும் தேன்கூட்டின் மீது கல்லெறிந்து மீண்டும் களேபரத்தைத் துவக்கியுள்ளது. அயோத்தியில் பாபர்மசூதியை இடித்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது ஆகிய ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல்களை நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு அடுத்து சனாதனக் கூட்டத்தின் திட்டமான பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிக்கிறது. இது சிறுபான்மை மக்கள், பழங்குடி மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கும் எதிரானது. பொது சிவில் சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் குழுக்களும் சீக்கியர்கள் பார்ஸிகள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
மனுஸ்மிருதி உள்ளிட்ட சனாதனச் சட்டங்களில் குற்றங்களுக்கான தண்டனைகூட ஒரே மாதிரியாக இல்லை, சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் தண்டனையின் அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனு அநீதியை மனதுக்குள் மறைத்துவைத்து பூசிப்பவர்கள்தான் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்று வாய்ப்பந்தல் போடுகின்றனர். 
 
இன்றைக்கு இந்தியாவில் குற்றவியல் உள்ளிட்ட பெரும்பாலான சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளன. மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக்கூறுகளை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சில சட்டங்களில் விதிவிலக்குகளை அனுமதித்துள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துச் சட்டங்களையே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்கத் துடிக்கிறது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில், அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நரேந்திர மோடி அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் குறுகிய அரசியல் நோக்கு அடிப்படையிலேயே பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் துவக்கியுள்ளது.
 
இதே ஒன்றிய அரசினால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 21ஆவது சட்ட ஆணையம் இப்போதுள்ள சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று அறிவித்துவிட்ட நிலையில், 2ஆவது சட்ட ஆணையம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் மீண்டும் சர்ச்சையை துவக்கியுள்ளது. 
 
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத நரேந்திர மோடி அரசு பெண்களின் நலனை பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டத்தை கொண்டுவரப்போவதாக கூறுவது கேலிக்கூத்தாகும். 
 
பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையிலான சட்டங்களை கொண்டுவரவேண்டிய அவசியமுள்ளது. அதற்கான விழிப்புணர்வும் கருத்தியல் பரப்புரையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் பெண்ணடிமைத்தனத்தை பெரிதும் பற்றிநிற்கும் சனாதனவாதிகளால் அதைச் செய்யமுடியாது. அதனாலேயே ஒன்றிய அரசு முன்வைக்கப் போவதாக சொல்லும் பொது சிவில் சட்டம் அதற்கு எந்தவகையிலும் உதவாது என்பதை இந்தத் தெளிவரங்கம் சுட்டிக்காட்டுகிறது. 
 
இவண்,
 
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்.                  

ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்