10 Mar 2022

திருநெல்வேலி எழுச்சி: நினைவுச்சின்னம் அமைத்திடுக!

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுடர்விடும் நிகழ்வாக அமைந்தது 1908ஆம் ஆண்டின் திருநெல்வேலி மக்கள் எழுச்சி.
பிபின் சந்திர பால் விடுதலையைக் கொண்டாடப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டுப்போன மக்கள் தலைவர் வ.உ.சி. அவர்களை வஞ்சகமாகக் கைது செய்து கோவைச் சிறைக்கு அனுப்பியது வெள்ளையராட்சி. அதைக் கண்டித்து 1908 மார்-13 அன்று திருநெல்வேலி மக்கள் கொந்தளித்து எழுந்தனர். பொதுமக்களும் மாணவர்களும் இணைந்த எழுச்சி ஊர்வலத்தின் போது காவல் நிலையம் தாக்கப்பட்டது. மண்ணெண்ணெய்க் கிடங்கிற்கு மூட்டப்பட்ட தீ மூன்று நாட்களாக எரிந்து கொண்டிருந்தது. மக்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருந்தது. காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் நான்குபேர் கொல்லப்பட்டனர். ஒரு இஸ்லாமியர், பட்டியல் சமூகத்தவர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பிரிவு மக்களின் குருதியும் ஒன்று கலந்து நெல்லை மண்ணில் ஓடியது. சாதி மதம் கடந்து வாழ்வின் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்த மக்கள் காவல்துறையின் தாக்குதலை தீரமுடன் எதிர்கொண்டனர். இதுவே நம் விடுதலைப் போராட்டத்தின் தன்மையைக் குறிக்கும் குறியீடாக இன்றைக்கும் பிரகாசிக்கிறது. 
 
இத்தகைய மக்கள் எழுச்சிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை அதற்குரிய அரசியல் திட்பத்துடனும் கலை நுட்பத்துடனும், மக்கள் பேரணியாகச் சென்ற அதே சாலையில் நிறுவுவது அவசியம். வரலாற்றாளர்களின் இக்கோரிக்கையை ஏற்று அதற்கான ஓர் அறிவிப்பை இந்த மார்ச் 13 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென தமுஎகச கருதுகிறது. பகைமை அரசியல் முன்னெடுக்கப்படும் இன்றைய நாளில் அதற்கெதிரான ஓர் ஒற்றுமைச் சின்னமாக அது அமையும். மேலும் இத்தியாகிகளின் பெயர்கள், ஒன்றிய அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் தொகுக்கப்படும் “விடுதலைப் போராட்டத் தியாகிகள் அகராதி”யில் உரிய முறையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென தமுஎகச கோருகிறது. 

அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)                         
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்    

10.03.2022                                                  
 

8 Mar 2022

"எதற்கும் துணிந்தவன்' படத்தைத் திரையிடக்கூடாதென பாமக, வன்னியர் சங்கம் மிரட்டல் - தமுஎகச கண்டனம்

திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர்.
 தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ)  

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

08.03.2022

28 Sept 2021

அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்குவதா? -பிரசார் பாரதி நிர்வாகத்திற்கு தமுஎகச கண்டனம்.

சென்னை, கோவை, தர்மபுரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்டு நாடு முழுவதுமுள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள் 23 மொழிகளிலும் 179 வட்டார மொழிகளிலும் நிகழ்ச்சிகளை படைத்தளித்து வருகின்றன. நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, நாடகம் என்பதான கலைவடிவங்களோடு விவசாயம், கல்வி, பொதுசுகாதாரம், அறிவியல், இலக்கியம், தொழிலாளர் நலன் சார்ந்த நிகழ்வுகளையும், பண்பலை வழியாக திரையிசைப் பாடல்களையும் ஒலிபரப்பி வருகின்றன. இவற்றுடன், பிரதமரின் மாதாந்திர உரையையும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் பெரும்பணியையும் ஆற்றிவருகின்றன. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், குரல் வடிவ நாடகக் கலைஞர்கள், கர்நாடக இசைக்கலைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் உரிய வெகுமதியை வழங்குகின்றன. ஆனால் இந்த வெகுமதியை விடவும் வானொலி நிலையத்தில் பங்கேற்பதால் கிடைக்கும் கௌரவத்தையும், அதன் மூலம் அரசின் பிற பிரச்சார வடிவங்களில் கிடைக்கும் வாய்ப்புகளையுமே இவர்கள் பெரிதாக மதிக்கின்றனர். இந்நிலையில், சென்றாண்டு கொரானா ஊரடங்குக் காலத்தில் நிகழ்ச்சிகள் தயாரிக்க முதன்முதலாக தடை வந்தது. இந்தாண்டு தளர்வுகள் வந்தபின் நிகழ்ச்சிகள் வழக்கம் போல் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என கலைஞர்கள் உள்ளிட்டோரும், நிகழ்ச்சி தயாரிப்பதனால் தங்களுக்கு வேலையும் ஊதியமும் கிடைக்கும் என தொகுப்பூதிய பணியாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிரசார் பாரதி நிர்வாகம் அனைத்து வானொலி நிலையங்களுக்கும் நிகழ்ச்சி தயாரிக்க கொடுக்கப்படும் தொகையினை 50 சதவீதத்திற்கும் குறைவாக வெட்டிச் சுருக்கியது. அடுத்த பேரிடியாக அனைத்து வானொலி நிலையங்களும் எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கு பதிலாக வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தயாரிப்பது, மற்ற நாட்களில் சென்னை வானொலி நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி அஞ்சல் செய்வது என்கிற திட்டம் 2021 அக்டோபர் முதல் அமலாகக்கூடும் என்கிற தகவல் கசிந்துள்ளது. இதனால் அந்தந்த வட்டார மக்களின் திறன்களும் தேவைகளும் முற்றாக புறக்கணிக்கப்படும். கும்மி, வில்லுப்பாட்டு, கதைப்பாட்டு, ஒப்பாரி என மரபார்ந்த கலைகளுக்கான ஆதரவும் மறுக்கப்படும். மட்டுமன்றி, நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிவரும் தொகுப்பூதிய பணியாளர்கள் சுமார் 1000 பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். புதுச்சேரியின் பிரஞ்சிந்திய கலாச்சாரத்தின் ஒருபகுதியாக வாரந்தோறும் இடம்பெறும் பிரஞ்சுமொழி நிகழ்ச்சியும், புதுச்சேரி சட்டசபையின் நடவடிக்கைகளும் புறக்கணிப்பிற்குள்ளாகும். அரசியல் சாசனத்தின் வழி நின்று நாட்டின் கலை இலக்கியம் பண்பாட்டு நடவடிக்கைகளின் ஊடாக மக்களுக்கும் அரசிற்கும் இடையே தகவல் பரிமாற்றச் சேவையாற்றும் இவ்வானொலி நிலையங்களை வர்த்தக நோக்கில் பார்ப்பது ஏற்புடையதல்ல. இத்தனைக்கும் ஊழியர் பற்றாக்குறை பெரிதாக இருந்துவரும் இக்காலத்திலும் வானொலி நிலையங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட விளம்பர இலக்கினை நிறைவேற்றி வருவதாகவும் தெரிகிறது. பன்மைத்தன்மையே இந்திய நாட்டின் அடையாளம். வட்டார மொழி வடிவம், மரபுசார் கலைகள், மண்சார் இலக்கியம், அந்தந்தப் பகுதிசார் விவசாயம் ஆகியவற்றுக்கு இதுகாறும் அளித்துவந்த ஆதரவினை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி விலக்கிக்கொள்ளும் முடிவினை பிரசார் பாரதி நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்திடல் வேண்டும். அதிகாரக்குவிப்பு, ஒற்றைத்துவ கருத்தியல் திணிப்பு ஆகிய தனது இழிநோக்கங்களுக்காக ஒன்றிய அரசானது, பிரசார் பாரதி நிர்வாகத்தின் மூலம் அகில இந்திய வானொலி நிலையங்களின் சுதந்திரமான பன்மைத்துவமான செயல்பாட்டை முடக்கிப்போடும் செயல்களை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் வலியுறுத்துகிறது. 

இப்படிக்கு, 

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ) 
 ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

21 Sept 2021

கலை இலக்கியம் இயக்கமென வாழ்ந்தவர் தோழர் ஜெயக்குமார்

- தமுஎகச செவ்வஞ்சலி

தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜெயக்குமார், குமரி மாவட்டத்தில் மிடாலக்காடு என்னும் ஊரில் 27.05.1963 அன்று பிறந்தவர். சிறு வயது முதலே தனது தந்தையின் வழியில் இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் தனது அண்டை ஊரான குறும்பனையில் இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவந்த சமூகவிரோதிகளை எதிர்கொள்ள அந்தத் தோழர்களுக்கு வழிகாட்டியவர். அத்துடன், இரவு பகல் பாராமல் தோழர்களோடு களத்தில் நின்று போராடி அங்கு இடதுசாரி இயக்கத்தை நிலைநிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

அதைத் தொடர்ந்து அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக மேடை நாடகத்தில் தீவிரமாகப் பயணித்தார். குமரியின் மேடை நாடக முன்னோடி என அறியப்படுகிற தோழர் இரணியல் கலையுடன் இணைந்து பல்வேறு மேடை நாடகங்களை அரங்கேற்றினார். நடிக்கவும் செய்தார். பின்னர் தமுஎகசவில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார். இவர் மாவட்டச் செயலாளராக செயல்பட்ட காலத்தில் தமுஎகசவை குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக்கினார்.  

முட்டத்தில் மாநில அளவிலான நாடகப் பயிற்சி முகாமை 10 நாட்களுக்கு சிறப்பாக நடத்திக் காட்டினார். குமரியின் சமூகச் சீர்திருத்தவாதிகளில் முன்னோடியான அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இணைக்க வலியுறுத்தும் கோரிக்கை மாநாட்டை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் நடத்தி முடித்தார். தேசிய நாடகப்பள்ளியோடு இணைந்து மார்த்தாண்டத்தில் தேசிய நாடக விழாவைச் சிறப்பாக நடத்தினார். தாகம் கலைக்குழு, தாகம் பதிப்பகம், மிடாலக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் போன்ற அமைப்புகளை உருவாக்கி  இன்றளவும் அவற்றை வழிநடத்தி வந்தார். மிடலக்காட்டில் அரசு நூலகம் அவரது முன்முயற்சியினாலேயே அமைந்தது. 

இயக்கத்தின் மீது தீராத பற்றும் நம்பிக்கையும் கொண்ட இவர் தனது குடும்பத்தில் அனைவரையும் இடதுசாரி இயக்கத்தில் பயணிக்கச் செய்து வெற்றி கண்டவர். இவரது இணையர் தொடர்ந்து பாலப்பள்ளம் பேரூராட்சியில் தலைவராகச் செயல்படும் அளவிற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தார். 

சிறுநீரகங்கள் செயலிழந்து தீவிர சிகிச்சைக்கு ஆளாகி தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டபோதும் தோழர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வழிநடத்துவதில் மிகவும் முக்கிய பங்காற்றி வந்தார். சாத்தூரில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு இயக்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியவர். குமரியில் தமுஎகச மாநில மாநாட்டை நடத்திட வேண்டும் என்கிற  பெருவிருப்பத்தை நம்முன்னே வைத்துவிட்டு இன்று காலமாகிவிட்டார் தோழர் ஜெயக்குமார்.  கலை இலக்கியம் அமைப்பாக்கம் தோழமை என முன்னுதாரணமாகச் செயல்பட்டு மறைந்துள்ள தோழர் ஜெயக்குமார்  அவர்களுக்கு தமுஎகச  மாநிலக்குழு வீரவணக்கம் செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துயரில் பங்கெடுக்கிறது.
இப்படிக்கு,
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ) 

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

21.09.2021

31 Aug 2021

பாடத்திட்டத்திலிருந்து மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி எழுத்துகள் நீக்கம் - - டில்லி பல்கலைக்கழகத்திற்கு தமுஎகச கண்டனம்

எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென டில்லி பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

இந்துத்துவாவினர் பாரதிய ஜனதா கட்சியிடமுள்ள ஒன்றிய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி தமது கருத்தியலுக்கு இணங்காத வரலாறு அறிவியல் சமூகவியல், கலை இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவருகின்றனர். நீக்கப்படும் அந்தப் பாடங்களுக்குப் பதிலாக இந்துத்துவக் கருத்தியலுக்கு இசைவாக வரலாற்றைத் திரித்து எழுதிய பொய்களையும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களையும், கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை நியாயப்படுத்தும் விதமாக இலக்கியப் பெறுமதியற்று எழுதப்பட்ட குப்பைகளையும் பாடங்களாக திணித்துவருகிறார்கள். 

கல்விப்புலத்தின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகங்களும் பாடத்திட்டக் குழுக்களும் தமது பொறுப்பிலிருந்து பிறழ்ந்து ஆளும் கட்சியின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் இழிநிலைக்குத் தாழ்ந்துவிடக்கூடாதென தமுஎகச வலியுறுத்துகிறது.  இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து  எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென்னும் டில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க முடியாது. நீக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள அப்பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடரவேண்டும் என்கிற முழக்கம் வலுப்பெற ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாவரும் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )  

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

26.08.2021

26 Jul 2021

மொழியறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு - தமுஎகச இரங்கல்

தமிழகத்தின் மூத்த மொழியறிஞர், ஆய்வறிஞர், தமிழிய வரலாற்று வரைவாய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர் இரா.இளங்குமரனார் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி திட்டத்தில் மொழியறிஞராக செயலாற்றிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர். திருக்குறளுக்கு பேருரை எழுதியவர். காணாமல் போய்விட்டது எனக் கருதப்பட்ட தமிழ் இலக்கண நூலாம் காக்கைப் பாடினியத்தை கண்டுபிடித்து பதிப்பித்தவர். தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுகொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளை தொகுத்தவர். அதேபோன்று செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகளைக் கொணர்ந்தவர். சமஸ்கிருதச் சடங்குகளை மறுத்து குறள் வழியில் தமிழ் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழில் நடத்துவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர். அவருடைய தனித்துவமான ஆய்வுகள் அவருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் ஆய்வுலகத்திற்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

மதுக்கூர் இராமலிங்கம் மாநிலத்தலைவர் (பொ)

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

26.07.2021

8 Jul 2021

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 07.07.2021 அன்று மாலை இணையவழியில் நடத்திய திரைப்படமாக்கல் திருத்தச்சட்ட வரைவு எதிர்ப்பரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

        இந்தியாவில் எத்தனையோ சவால்களைக் கடந்துதான் திரைப்படக்கலை முன்னேறி வந்திருக்கிறது. சந்தை சார்ந்த பொருளாதார நிர்ப்பந்தங்கள் ஒருபுறம், படங்களின் உள்ளடக்கங்களுக்கு எதிரான கெடுபிடிகள் மறுபுறம் என பற்பல முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஒரு திரைப்படம் வெளியாக வேண்டியிருக்கிறது. குறிப்பாக  சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில்  நிலைநிறுத்தப்பட்ட மதிப்பீடுகளை விமர்சித்து மாற்றத்தைக் கோருகிற முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட படங்களை மதவாத, சாதிய மேலாதிக்கவாதிகளும் பழமைவாதிகளும் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும் திரையரங்குகளில் நேரடி வன்முறைகள் மூலமாகவும் முடக்க முயன்றிருக்கிறார்கள். பல படங்கள் படப்பிடிப்புக் கட்டத்திலேயே கூட தாக்குதல்களைச் சந்தித்திருக்கின்றன.

    அரசியல் சாசனத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள  கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் வழிநின்று எடுக்கப்படும் திரைப்படங்கள் மீதான இப்படிப்பட்ட தாக்குதல்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்பது போல ஒன்றிய அரசானது நடப்பிலுள்ள 1952 ஆம் வருடத்திய திரைப்படமாக்கல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவை 2021 ஜூன் 18 அன்று வெளியிட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருத்தங்கள் மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு மிகக்குறுகிய கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்ட விதமே அரசின் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. சமூகத்தில் ஒரு பொதுவிவாதம் உருவாகும் முன்பாகவே கருத்து கேட்கப்பட்டுவிட்டதாக கணக்குக்காட்டும் இந்த உத்தி அப்பட்டமான ஜனநாயக மீறல் என இந்த எதிர்ப்பரங்கம் கருதுகிறது. 

    நீதிபதி முகுல் முட்கல் குழு, ஷியாம் பெனகல் குழு ஆகியற்றின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்படுவதாக சொல்லிக்கொண்டாலும் அது முழு உண்மையல்ல. அனைவரும் காணத்தக்கது, குறிப்பிட்ட வயதுப்பிரிவுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களுடன் சேர்ந்து காணத்தக்கது, வயதுவந்தவர்கள் மட்டுமே காணத்தக்கது என வகைப்படுத்துவதில் கூட இக்குழுக்களின் பரிந்துரை முழுமையாக ஏற்கப்படவில்லை. இன்ன வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே காணக்கூடியது என்று முன்கூட்டியே பொறுப்புத்துறப்பு எச்சரிக்கை வாசகத்துடன் வெளியிடுவது சரியாக இருக்குமென இக்கருத்தரங்கம் கருதுகிறது. 

    அடுத்து திரைப்படங்களை போலியாக நகலெடுப்பதைத் தடுப்பது தொடர்பான சட்டத்திருத்தத்தைப் பொறுத்தவரை, அது இந்தத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், போலியாக நகலெடுப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் கொள்வதற்கு பதிலாக  தண்டனையை அதிகப்படுத்துவது பற்றியதாக உள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் போதுமான தண்டனைப்பிரிவுகள் இருக்கும் நிலையில், மேற்கொண்டும் தண்டனையை அதிகரிப்பதனால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நகலெடுக்க முடியாதபடி நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக கண்காணிக்கும் பொறுப்பினை அரசே ஏற்பதுதான் சரியாகுமெனவும் இவ்வரங்கு கருதுகிறது. 

    ஏற்கத்தக்க தோற்றத்துடன் இரண்டு திருத்தங்களை முன்வைத்துள்ள ஒன்றிய அரசு தந்திரமாக இவற்றுடன் ஏற்கவேமுடியாத கடுமையாக எதிர்த்து தடுக்கவேண்டிய ஒரு திருத்தத்தையும் சேர்த்து முன்மொழிந்துள்ளது. இந்தத் திருத்தத்தை திணிப்பதற்காகத்தான் மேற்சொன்ன இரண்டு திருத்தங்களும் சேர்க்கப்பட்டனவோ என்று ஐயுறவேண்டியுள்ளது. திரைப்படச் சான்றளிப்பு வாரியத்தின் முறையான சான்றளிப்புடன் வெளியாகிவிட்ட ஒரு படத்தின்மீது யாரோ ஒரு தனிமனிதர் அல்லது அமைப்பிடமிருந்து புகார் வருமானால், அந்தப் படத்தினை திரும்பப்பெற்று சான்றிதழை மறுபரிசீலனை செய்யுமாறு திரைப்படச் சான்றளிப்பு வாரியத்திற்கு ஆணையிடும் அதிகாரத்தை செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தனக்குத்தானே வழங்கிக்கொள்கிற இத்திருத்தம் சங்கரப்பா எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானது என இவ்வரங்கு சுட்டிக்காட்டுகிறது. திரைப்படச் சான்றளிப்பு வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட பிறகு அதில் தலையிட அரசுக்கு சட்டத்தில் இடமில்லை என கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் சொல்லப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சிதைத்து கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும்விதமான  இந்தத் திருத்தத்தை அரசு முன்மொழிந்துள்ளது. 

    வாரியம் தவறான சான்றளிக்கிறது அல்லது சான்றளிக்க மறுக்கிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு என இருந்து வந்த, முற்போக்கான பல படங்கள் மக்களிடம் வருவதற்கு உதவியாக இருந்த தீர்ப்பாயத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு தன்னிச்சையாக கலைத்துவிட்டது. சான்றிதழ் தொடர்பான முறையீடுகளை மட்டுமே கவனித்துவந்த இந்தத் தீர்ப்பாயத்தை கலைத்ததன் மூலம் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கியிருக்கும் நீதிமன்றங்களைத்தான் பெரும் பணச்செலவோடு நாடவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இப்போது, மேலுமொரு பலத்த அடியாக திரைப்படமாக்கல் சட்டத்தில் இந்த விதி திணிக்கப்படுகிறது. இது, இனிமேல் சான்றிதழ் பெறப்போகிற புதிய படங்களுக்கு மட்டுமல்ல, கடந்த காலங்களில் சான்றிதழ் பெற்று மக்களிடையே மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டுசென்ற பழைய படங்களுக்கும் பொருந்தும் என்று திரைத்துறையின் நலனில் அக்கறையுள்ளவர்கள் வெளிப்படுத்தும் கவலையை இவ்வரங்கம் பகிர்ந்துகொள்கிறது. 

    சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கிற பிற்போக்குத்தனங்களுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும், பாலினப்பாகுபாடுகளுக்கும் எதிரான முற்போக்குச் சிந்தனைகளையும், ஊட்டப்படும் மதவெறிக்கு எதிரான நல்லிணக்கக் கருத்துகளையும் வலுவாகச் சொல்கிற படங்களை ஒடுக்குவதற்கே தனிமனிதர்களின் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் இந்த விதி கையாளப்படும் என்பது வெளிப்படை. இது திரைக்கலைஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல, எப்படிப்பட்ட கருத்துகள் கொண்ட படங்களை பார்ப்பது என்று தேர்வு செய்கிற உரிமையும் பறிக்கப்படுவதால் மக்களின் பிரச்சினையுமாகும்.

    உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத சர்வாதிகாரத்தனமான இந்த விதியை விலக்கிக்கொள்ள வலியுறுத்தும் திரையுலகப் படைப்பாளிகள், கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போர், ஜனநாயகச் சக்திகள் ஆகியோரோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்துகிற இந்தக் கருத்தரங்கம் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒன்றிய அரசு இவர்களது எதிர்ப்புக்கும், படைப்புச் சுதந்திரத்திற்கும் மக்களின் பன்முகக் கருத்துகளை அறியும் உரிமைக்கும் மதிப்பளித்து, இந்தச் சட்டவிதியைக் கைவிட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

    திரைப்படச் சான்றிதழுக்கான மத்திய வாரியம், அதன் பெயர் சரியாகச் சுட்டுவதைப் போல திரைப்படங்களை அவற்றின் உள்ளடக்கம், காட்சியாக்கம் சார்ந்து வகைப்படுத்தி  அதற்கேற்ற சான்றிதழை வழங்கும் பணியை மட்டுமே செய்வதற்கான தன்னதிகாரமுள்ள அமைப்பாகும். ஆனால் நடைமுறையில் அது வரம்புமீறி குறுகிய அரசியல் சாய்மானங்களுடன் திரைப்படங்களை தணிக்கை செய்யும் அமைப்பாக மாறி படங்களின் கருத்துச்செறிவையும் படைப்பழகையும் சிதைத்துவருகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் படியான எந்தவொரு வடிவமும் முன்தணிக்கைக்கு ஆளாக வேண்டியதில்லை என்கிற நிலையை எட்டியுள்ள நாட்டில் திரைப்படங்கள் மட்டும் தணிக்கையை எதிர்கொள்ளும் அவலத்தை சட்டரீதியாக தடுக்கும் விதி இத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும். அதேபோல சான்றளிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு மீண்டும் உருவாக்கவேண்டும். மேற்சொன்ன இக்கோரிக்கைகளுக்காக திரைத்துறையினர் மட்டுமன்றி கருத்துரிமையிலும் அரசியல் சாசன மாண்புகளிலும் நம்பிக்கையுமுள்ள அனைவரும் குரல்கொடுக்க முன்வருமாறு இவ்வரங்கம் கேட்டுக்கொள்கிறது. 

உண்மையுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

07.07.2021

23 Jun 2021

நீதியரசர் மாண்புமிகு ஏ.கே.ராஜன் உயர்நிலைக் குழுவிற்கு தமுஎகச கடிதம்

 பெறுகை

தலைவர்

நீதியரசர் மாண்புமிகு ஏ.கே. ராஜன் உயர்நிலை குழு

மருத்துவக் கல்வி இயக்ககம், 

3வது தளம், கீழ்ப்பாக்கம்., சென்னை- 600010


அய்யா, 

பொருள்: நீட்  தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்- நீட்டை கைவிடக் கோருதல் 

– தொடர்பாக.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே கலை இலக்கியம், பண்பாடு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சமூக நீதி ஆகிய தளங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றது. சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்துவருகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கலைநேயர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இவ்வமைப்பு நீட் தேர்வினை அதன் தொடக்கநிலையிலிருந்தே எதிர்த்துவருகிறது.

நீட் தேர்வை திணித்தபோது அதை நியாயப்படுத்தி ஒன்றிய அரசால் முன்வைக்கப்பட்ட தகுதி, திறமை, வெளிப்படைத்தன்மை, வணிகமயத் தடுப்பு போன்ற வாதங்கள் அனைத்துமே உண்மைக்கு மாறானவை என்பதை நடைமுறை நிரூபித்துவிட்டபடியால் அவற்றை திரும்பவும் சொல்வதைத் தவிர்த்து பொருட்படுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்களை தங்களது குழுவின் கவனத்திற்கு தமுஎகச முன்வைக்கிறது.  

உலகின் தொன்மையான இனங்களில் ஒன்றெனும் வகையில் தமிழினம் தனது சொந்த வாழ்வனுபங்களினூடாக உருவாக்கிக் கொண்ட பண்பாட்டில் கல்விக்கு எப்போதுமே முதன்மையான இடத்தை வழங்கிவந்திருக்கிறது. கல்வியின் தத்துவம் அதன் நோக்கங்கள் மற்றும் தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் அதனால் நிகழவேண்டிய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தொடர்பாக இடையறாது இங்கு நடந்துவரும் விவாதங்களிலிருந்து தமிழினம் தனக்கான கல்வியை உருவாக்கிக்கொண்டுள்ளதுடன் காலத்துக்குக் காலம் மேம்படுத்தி ஓரளவுக்கு தற்காலப்படுத்தியும் வந்துள்ளது. 

கல்விசார்ந்த மதிப்பீட்டளவுகள் பலவற்றில் தமிழ்நாடு அகில இந்திய சராசரியைவிடவும் பலபடிகள்  முன்னேறியுள்ளதற்கு மற்றுமொரு வலுவான காரணம் இங்குள்ள சமூகநீதிக் கண்ணோட்டமாகும். வர்ணாஸ்ரமப் படிநிலையாலும் சாதியப் பாகுபாட்டினாலும் யாருக்கெல்லாம் சமூக வாழ்வின் எந்தெந்த நிலைகளிலும் தளங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக நடத்தப்பட்டுவரும் நெடிய போராட்டத்தின் உடனிகழ்வாக கல்விப் பரவலாக்கமும் நிகழ்ந்துவருகிறது. இவ்வாறாக பெண்கள், அட்டவணைச் சாதியினர், பழங்குடிகள், மத/மொழி/பாலினச் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறத்தவர் ஆகியோர் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியையும் எட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கல்விப்புலத்தில் தமிழகம் அடைந்துள்ள இந்த முன்னேற்றங்களை பின்னுக்கு இழுப்பதாக நீட் தேர்வு  இருக்கிறது என்பதற்கு கடந்தாண்டுகளின் அனுபவங்களே போதுமான சான்றாதாரங்கள் என எமது அமைப்பு கருதுகிறது. 

தனது மொழியின் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட மாநில பாடத்திட்டத்தில், தனது மொழியுறவு ஆசிரியர்களினது 12 ஆண்டு கால பயிற்றுவிப்பில் கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளும் மாணவர் அதன் தொடர்ச்சியில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழைவதே சரி. (இவ்விசயத்தில் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் பரிந்துரை கவனங்கொள்ளத்தக்கது). எனவே  தமிழ்நாடு பாடத்திட்டம், கல்விக்கூடம், ஆசிரியத்துவம், 12 ஆண்டுகால படிப்புழைப்பு ஆகியவற்றை மதிப்பற்றதாக்கும் நீட் தேர்வு அவசியமற்றது என தமுஎகச கருதுகிறது.

12 ஆம் வகுப்புவரை மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவர்களை, அவர்களது தாய்மொழியில் அல்லாத, அவர்களது கற்றல் வரம்புக்குத் தொடர்பற்ற, அவர்களது பண்பாட்டுச் சூழமைவுக்கு புறத்தே உருவாக்கப்பட்ட மத்திய பள்ளிக்கல்வி வாரிய பாடத்திட்டத்தின் படியான நீட்தேர்வை எழுதவைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. 

பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களைப்போலவே மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டமும் அவற்றில் ஒன்றுதானே தவிர, அது அப்படியொன்றும் எல்லாவற்றுக்கும் மேலானதோ பொதுவானதோ அல்ல, ஆனால் வேறானது, கற்பித்தல் கற்றல் முறையிலும் சற்றே மாறுபட்டது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் பெரும்பாலானவை உயர் வருவாய்ப் பிரிவினர் மற்றும் ஒன்றிய அரசதிகாரிகள் ஊழியர்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்காக நகரங்களில் இயங்கிவருபவை. நாட்டின் மொத்த மாணவர்களில் 10சதத்தினர்கூட படித்திராத அந்தப் பாடத்திட்டத்தின் படியான நீட் தேர்வை அனைவரும் எழுதியாக வேண்டும் என்பதை ஒரு பண்பாட்டுத்தாக்குதலாகவே எமது அமைப்பு கருதுகிறது.

நீட், எடுத்தயெடுப்பிலேயே மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் பெரும்பகுதியினரை வடிகட்டி நீக்கிவிடுகிறது. முதல்முறை எழுதும் தேர்வில் மத்திய பள்ளிக்கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களிலும்கூட வெகுசிலரே தேர்ச்சியடைய முடிகிறது. அதற்கும் அவர்கள் பள்ளிக்குள்ளேயோ தனியாகவோ பயிற்சி வகுப்பிற்கு செல்லவேண்டியுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பிற்கென பெருந்தொகை செலவழித்தாக வேண்டும் என்கிற நிலையில் அங்கொரு பகுதியினர் வடிகட்டி நீக்கப்படுகின்றனர். பயிற்சிமையங்கள் உள்ள நகரங்களுக்கு வரமுடியாத கிராமப்புறத்தவர் வடிகட்டி நீக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் அட்டவணைச் சாதியினர், பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் என்பதை கவனத்தில் கொண்டால் அவர்கள் தமது “பிரதிநிதித்துவத்தை” பெறமுடியாமல் போவதைக் காணமுடியும். இவ்வாறாக மொழி, பாலினம்,  சாதி, நிலப்பரப்பு, பொருளாதாரம் எனப் பல்வேறு நிலைகளில் பாரபட்சம் காட்டுகிற நீட்தேர்வை கைவிடுவது சமூகநீதிக்கான நடவடிக்கை எனக் கருதுகிறது தமுஎகச. 

மாநிலப் பாடத்திட்டத்தில் +2வரை படித்துவிட்டு வேறொரு பாடத்திட்டத்தில் நீட் எழுதும் இக்கட்டிலிருந்து தப்பிக்க நீட் தேர்வை எழுதுவதற்கு இசைவான பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆங்கிலோ-இந்தி பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் விரட்டியிழுக்கப்படுகிறார்கள். பல தனியார் பள்ளிகள் மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து வெளியேறி மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தில் இணைகின்றன. நுழைவுத்தேர்வுக்கு இசைவான பாடத்திட்டங்களின் கீழாக புதிய தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை ஒரு மொழிப்பாடமாகக்கூட சொல்லித் தருவதில்லை. இதற்கொரு கேடுகெட்ட உதாரணம் தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மனி போன்ற மொழிகளே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு வாழ்விற்கு சற்றும் தொடர்பற்ற இத்தகைய கல்வி வளாகங்களுக்குள் அனுப்பப்படும் குழந்தைகள் தமது சொந்த பண்பாட்டு விழுமியங்கள் அற்ற குடிமக்களாக உருவாகும் அவலம் நேர்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன், பொதுப்பள்ளி இலவசக்கல்வி என்கிற மக்களாட்சி இலக்குகளை நடைமுறையில் போக்கடித்து சாதி, மதம், பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றை சமூக மூலதனமாக ஏற்கனவே பெற்றிருப்பவர்களால் வாங்கப்படுகிற ஒரு பண்டமாக கல்வியை மாற்றும் சதியும் நீட் வழியே நடக்கிறது. ஆக, மருத்துவம் பயில விரும்பும் சில ஆயிரம் மாணவர்களின் மீது மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்விப்புலத்தின் மீதும் பெருங்கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதாலுமே நீட் தேர்வினை எமது அமைப்பு எதிர்க்கிறது.  

பொதுத்தேர்வுக்காக மட்டுமன்றி நுழைவுத்தேர்வுக்காகவும் படித்தாக வேண்டிய நெருக்கடியில் மாணவர்கள் தமது பருவத்திற்கே உரிய சமூக வாழ்வை வாழ்வதிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகின்றனர். குடும்பவிழாக்கள், திருவிழாக்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், பயணங்கள், அரசியல் நிகழ்வுகள், விளையாட்டுகள் போன்ற பண்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கப்படுகிற அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இயல்பாக இணைவதில் உள்ள உளவியல் சிக்கல்களை பரிசீலித்தாலும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் அவசியமற்றவை என்கிற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.  

எத்தனை ஆண்டுகள் வேண்டுமாயினும் பயிற்சி எடுத்து தேர்ச்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதும் வாய்ப்பு பற்றி விதந்தோதப்படுகிறது. ஆனால் இதற்கான நேரத்தையும் பொருட்செலவையும் தாங்கும் சக்தி எவ்வளவுபேருக்கு இருக்கிறது? இந்தத் தயாரிப்புக்காலத்தில் உண்டாகும் மனவுளைச்சலுக்கும் நிச்சயமற்றத்தன்மைக்கும் யார் பொறுப்பேற்பது? இப்படி காலந்தப்பி தேர்ச்சி பெற்று தம்மிலும் இளையவர்களோடு ஒரு வகுப்பில் படிப்பவர்கள் உளரீதியாக எவ்வளவு குன்றிப்போவார்கள் என்பது பற்றி நீட் ஆதரவாளர்கள் பேசுவதேயில்லை. 

+2 முடித்ததுமே மருத்துவம் படிப்பதற்குச் சென்றுவிட வேண்டிய மாணவர்கள் நீட் தயாரிப்புக்காக இழக்கும் வருடங்களை  அவர்களுக்கு யார் திருப்பித்தருவது? செயலூக்கமான மாணவப் பருவத்தின் பெரும்பகுதியை இவ்வாறு தேர்வு குறித்த அச்சத்திலும் தோல்வியினால் துவண்டு தாழ்வுணர்ச்சியில் முடங்குவதும் ஆளுமைச்சிதைவுக்காளாகி தற்கொலையுண்டு மாய்வதுமாக எமது சந்ததியினரை அழிக்கும் பெருங்குற்றத்தை இழைத்துக்கொண்டிருக்கும் நீட் தேர்வினை கைவிட்டேயாக வேண்டும். 

நீட் தேர்வினைக் கைவிட்டு +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையை நடத்தும்போது கைக்கொள்ள வேண்டிய இரண்டு நடவடிக்கைகள்: 

1. அந்தந்த வகுப்புக்கான பாடங்களை மட்டுமே அந்தந்த வகுப்பில் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.  +2 பாடங்களை முந்தைய கல்வி ஆண்டிலிருந்தே நடத்தி மாணவர்களை வதைத்து மதிப்பெண்களை போலியாக பெருக்கிக்காட்டும் மோசடி தடுக்கப்பட வேண்டும்.  

2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியின் இடங்கள் இப்போதைக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது நாளடைவில் அரசுப்பள்ளிகளுக்கான முன்னுரிமையாக மாற்றப்பட வேண்டும். 

உண்மையுடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்


23.06.2021

20 Jun 2021

அனைத்துச்சாதியினரையும் பாலினப் பாகுபாடின்றி அர்ச்சராக்கவும், தமிழில் அர்ச்சனையை முன்னிலைப்படுத்தவும் 20.06.2021 அன்று இணையவழியில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

தமிழ்ச்சமூகம் பண்பாட்டிலும் சமூகநீதியிலும் ஓரங்கமான வழிபாட்டுரிமையை அடைவதில் அரை நூற்றாண்டுகாலமாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டுவருகிறது. அனைத்துச்சாதியினரையும் அர்ச்சராக்கும் சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக பணியமர்த்தப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை என்கிற இயல்பான எளிய உரிமைகளுக்காகக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றுவர வேண்டியுள்ளது. தீர்ப்பினைப் பெற்றாலும் நடைமுறைப்படுத்துவதில் இடர்ப்பாடு நீடிக்கிறது.


இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்துச் சாதியினரையும், பயிற்சி முடிக்கிற பெண்களையும் 100 நாட்களில் பணியமர்த்துவதாக செய்துள்ள அறிவிப்பை இந்தக் கருத்தரங்கின் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அரசின் அறிவிப்பு வெளியானதும் பாலினப் பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையின் நியாயத்தையும்  அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. இதேபோல தமிழில் குடமுழுக்கு செய்வதற்கும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )       

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

12 Jun 2021

வற்றிய கண்களிலிருந்து வானுயரம் எம்பிய குத்துவாள்: எழுத்தாளர் சித்தலிங்கையா - தமுஎகச புகழஞ்சலி

          கன்னடத்தில் எழுதிவந்திருந்தாலும் நாடு முழுவதுமுள்ள கலைஇலக்கியச் சமூகத்தினரால் மரியாதையின் உச்சிகளில் வைத்து கொண்டாடப்பட்ட கவிஞர் சித்தலிங்கய்யா அவர்களை கொரானா பெருந்தொற்று நம்மிடமிருந்து நேற்று பறித்துக்கொண்டது. “பூமித்தாய் பெறாத பிள்ளைகள்” இலக்கியத்தின் ஓரஞ்சாரத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சமூகத்தின் பேசுபொருளாக்கிய தலித் இலக்கியத்தை கன்னடத்தில் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். தொந்தரவில்லாத விசயங்களை எழுதிக் குவிக்கும் போக்கினை நிலைகுலையச் செய்யும்  ஆவேசத்தோடு பண்டாயா என்கிற கலகவகை எழுத்துகளை தொடங்கிவைத்தவர்களில் அவரும் ஒருவர். 

    அலங்காரமான மொழிச்சுமையை உதறி அவரே ஒரு கவிதையில் சொல்வதுபோல தன் மக்களின் “பூகம்பம் போன்ற மொழியோடு” அவரெழுதிய கவிதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அகத்தையும் முகத்தையும் அதுவரையறியா வண்ணங்களில் காட்டின. இந்த நாடு தீண்டப்படுகிறவர்களின் இந்தியா என்றும் தீண்டப்படாதவர்களின் இந்தியா என்றும் இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்னும் அண்ணல் அம்பேத்கரின் கூற்றுக்கு வாழ்வியல் விளக்கமாக விளங்குகிறது சித்தலிங்கய்யாவின் தன்வரலாற்று நூலான ஊரும் சேரியும். 

        2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 10ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை, கலைஇலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் போராயுதங்களில் ஒன்றாக மாற்றியமைக்கும் பொறுப்பை உணர்த்துவதாயிருந்தது. தமிழில் சாதியொழிப்பு மற்றும் சமத்துவத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகளின் முன்வரிசைப் போராளியாகவும் கல்வியாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இடையறாது செயல்பட்டு வந்த சித்தலிங்கய்யா இப்பணிகளில் எதுவொன்றையும் தனது எழுத்துப்பணிக்கு எதிராக நிறுத்தியவரல்ல. தமிழில் படிக்கக்கிடைக்கும் சித்தலிங்கய்யாவின் எழுத்துகள் வழியே நமக்குள் உருவாகியிருக்கும் சித்திரத்தை விடவும் நெடிதுயர்ந்த ஆளுமையான அவரது மறைவுக்கு தமுஎகச தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.        

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

12.06.2021