குறிக்கோள்கள்

தமுஎகச வின் குறிக்கோள்கள்
படைப்பு வெளியிலும் - சமூக வெளியிலும்1. உலக மக்களின் பொது எதிரியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சமரசமின்றிப் போராடுவது.

2. உலகமெங்கும் எழுகின்ற உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்குத் துணை நிற்றல். உழைப்பை உன்னதப்படுத்தும் படைப்புகளை படைத்தல் மற்றும் அத்தகைய படைப்புகள் எங்கிருந்தாலும் உயர்த்தி பிடித்தல்.

3. அனைத்து நாடுகளின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் காத்திட உறுதி கொள்ளுதல்.

4. அனைத்து வகை மதவெறிக்கும் எதிராக - ஒற்றைப் பண்பாட்டை திணிக்கும் வர்ணாசிரமவாதிகளின் முயற்சிக்கு எதிராக மக்களின் பன்முகப் பண்பாட்டுக் கூறுகளை உயர்த்தி பிடித்தல். நாட்டின் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் சமத்துவமான வாழ்வுக்காகவும் உறுதியுடன் போராடுவது.

5. சகல விதமான மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக அறிவியல் பார்வையுடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கம் நடத்திடுதல்.

6. தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக - வழிபாட்டு மொழியாக - வழக்கு மொழியாக - கற்பிக்கும் வழியாகத் தமிழே ஆளவேண்டும் என்கிற பாதையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் மத்தியில் தேசிய மொழிகள் அனைத்துக்கும் சம உரிமைக்காகவும் சம வாய்ப்புக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புதல்.

7. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் வைத்துப் போராடும் உரிமை எனும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் சகல பகுதி மக்களுக்கும் கிடைத்திடத் துணை நிற்றல்.

8. சாதியை வன்கொடுமைகளுக்கு எதிராக - ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக - பழங்குடி மக்களின் விடுதலைக்காக - ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு – இடையறாது சமரசமின்றிப் போராடுவது.

9. பெண் விடுதலை இல்லாமல் மனித குல விடுதலை முழுமை பெறாது என்கிற உணர்வுடன் பெண் சமத்துவத்துக்காக இடையறாது சமர் புரிதல்.

10. மூன்றாம் பாலினமான அரவாணிகளின் வாழ்வுரிமைக்காக, அவர்களின் கௌரவமிக்க வாழ்வுக்காகச் சாத்தியமான வடிவங்களிலெல்லாம் தொடர்ந்து செயல்படுதல்.

11. திரைப்படத் துறையிலும், தொலைக்காட்சி ஊடகத்திலும் முற்போக்கான மாற்றங்கள் உண்டாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது : குறும்பட, ஆவணப்படங்கள் மற்றும் மாற்றுத் திரைப்படங்களுடன் ஒரு மகத்தான தெரு சினிமா இயக்கத்தை தமிழகமெங்கும் கட்டி எழுப்புதல்,

12. குழந்தைகளின் உரிமைகளுக்காகவும், அனைவருக்குமான ஒரு பொதுக்கல்வி முறைக்காகவும் தொடர்ந்து போராடுவது.

இத்தகைய லட்சியங்களையும், நோக்கங்களையும் குறிக்கோள்களையும் ஏற்கிற அனைத்துப் படைப்பாளிகளையும் - எழுத்தாளர்கள், கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் வாசகர்கள், விமர்சகர்கள், பண்பாட்டு ஊழியர்கள், அறிவு ஜீவிகள் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இருகரம் விரித்து அழைக்கிறது.


இந்த லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஒரு முற்போக்கான விரிந்து பரந்த மேடையை உருவாக்கக் கரம் இணைக்க வருமாறு அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.( 11 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கொள்கை அறிக்கையில் இருந்து. . )