13 Jul 2023

பிளவுவாத அரசியலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

பொது சிவில் சட்டம் பற்றி 12.07.2023 மாலை இணையவழியில் தமுஎகச மாநிலக்குழு நடத்திய தெளிவரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு பன்மைத்துவ இந்தியா எனும் தேன்கூட்டின் மீது கல்லெறிந்து மீண்டும் களேபரத்தைத் துவக்கியுள்ளது. அயோத்தியில் பாபர்மசூதியை இடித்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது ஆகிய ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல்களை நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு அடுத்து சனாதனக் கூட்டத்தின் திட்டமான பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிக்கிறது. இது சிறுபான்மை மக்கள், பழங்குடி மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கும் எதிரானது. பொது சிவில் சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் குழுக்களும் சீக்கியர்கள் பார்ஸிகள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
மனுஸ்மிருதி உள்ளிட்ட சனாதனச் சட்டங்களில் குற்றங்களுக்கான தண்டனைகூட ஒரே மாதிரியாக இல்லை, சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் தண்டனையின் அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனு அநீதியை மனதுக்குள் மறைத்துவைத்து பூசிப்பவர்கள்தான் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்று வாய்ப்பந்தல் போடுகின்றனர். 
 
இன்றைக்கு இந்தியாவில் குற்றவியல் உள்ளிட்ட பெரும்பாலான சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளன. மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக்கூறுகளை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சில சட்டங்களில் விதிவிலக்குகளை அனுமதித்துள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துச் சட்டங்களையே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்கத் துடிக்கிறது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில், அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நரேந்திர மோடி அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் குறுகிய அரசியல் நோக்கு அடிப்படையிலேயே பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் துவக்கியுள்ளது.
 
இதே ஒன்றிய அரசினால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 21ஆவது சட்ட ஆணையம் இப்போதுள்ள சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று அறிவித்துவிட்ட நிலையில், 2ஆவது சட்ட ஆணையம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் மீண்டும் சர்ச்சையை துவக்கியுள்ளது. 
 
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத நரேந்திர மோடி அரசு பெண்களின் நலனை பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டத்தை கொண்டுவரப்போவதாக கூறுவது கேலிக்கூத்தாகும். 
 
பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையிலான சட்டங்களை கொண்டுவரவேண்டிய அவசியமுள்ளது. அதற்கான விழிப்புணர்வும் கருத்தியல் பரப்புரையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் பெண்ணடிமைத்தனத்தை பெரிதும் பற்றிநிற்கும் சனாதனவாதிகளால் அதைச் செய்யமுடியாது. அதனாலேயே ஒன்றிய அரசு முன்வைக்கப் போவதாக சொல்லும் பொது சிவில் சட்டம் அதற்கு எந்தவகையிலும் உதவாது என்பதை இந்தத் தெளிவரங்கம் சுட்டிக்காட்டுகிறது. 
 
இவண்,
 
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்.                  

ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்