9 Oct 2019

10% இடஒதுக்கீடு எனும் குளறுபடி; விவாதம் தொடரட்டும்!


சாதியத்தடைகளால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசதிகார மையங்கள் ஆகியவற்றில்  பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட பட்டியல் சாதியினருக்கு 15%, பட்டியல் பழங்குடியினருக்கு 7.5% இடங்கள் ஒதுக்கப்படுவதை அரசமைப்புச்சட்டம் உறுதிசெய்தது. பின்னாளில் இதே காரணங்களின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாட்டின் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை காரணம் காட்டி 27% எனச் சுருக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள இந்த இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்கி,   மேற்சொன்ன மூவகையினருக்குமான இட ஒதுக்கீட்டு அளவுகளை அதிகரிக்கத் தோதாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பிலிருக்கிறது.

இப்போதைக்கு பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் இன்னமும் அதன் முழு அளவில் நிரப்பப்படுவதில்லை. மட்டுமன்றி, இவர்களில் பொதுப்பிரிவில் இடம் பெறுமளவுக்கு தகுதி பெறுகிறவர்களும் கூட பொதுப்பிரிவில் இடம் வழங்கப்படாமல் அவரவர் சாதிக்குரிய இடங்களில் தள்ளிவிடப்படுகிறார்கள். அதாவது பொதுப்பிரிவினருக்கானதாக உள்ள  50.5%  இடங்கள் நடைமுறையில் முற்படுத்திக்கொண்ட சாதியினருக்கு மட்டுமேயான இட ஒதுக்கீடாக பல்வேறு துறைகளில் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் பெயரளவிலேனும் அனைவருக்குமானதாக உள்ள இந்த 50.5%  இடங்களில் 10% இடங்களை தனியாகப் பிரித்து முற்படுத்திக்கொண்ட சாதியினரில் வறியவர் என்கிற புதிய வகைமையினரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு வழங்குவதற்காக அரசியல் சாசனத்தையே திருத்தி மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

இந்தப் புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் முன்மொழியப்பட்ட நோக்கம் மற்றும் தருணம், நிறைவேற்றப்பட்ட விதம், அமலாக்கத்தில் காட்டப்படும் வேகம், இந்த ஒதுக்கீட்டு வரம்புக்குள் வருவதற்கான தகுதியாம்சங்கள், சட்டரீதியான செல்லுபடித்தன்மை போன்றவை சமூகநீதி அடிப்படையிலான பிரதிநிதித்துவம் என்கிற அரசியல் சாசன நோக்கங்களுக்கு பொருத்தமானது தானா என்கிற கேள்வியை எழுப்புகின்றன. இந்த புதிய ஒதுக்கீடு சமூகநீதிக் களத்தில் எத்தகைய பாதகமான, பாரபட்சமான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான உடனடி சாட்சியங்களாக சமீபத்தில் வெளியான பல்வேறு துறைகளின் / நிறுவனங்களின் பணியாளர் நியமனத் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. வரலாற்றுரீதியாக சாதியத்தடைகளால் கல்வி பெற வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப்பிரிவினருக்கும் உடல்ரீதியான தடையுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விடவும் பலமடங்கு குறைவான மதிப்பெண்ணை முற்படுத்திக்கொண்ட சாதிகளின் வறியோருக்கு குறைந்தபட்சத் தகுதியாக நிர்ணயிப்பதன் மூலம் இவர்கள் அரசின் தனித்த கவனத்திற்குரிய சிறப்புப்பிரிவினராக முன்னிறுத்தப்படுகின்றனர். அடுத்தடுத்து வரும் நியமனங்களின் போதும் இதேபோன்ற சர்ச்சைகள் எழக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டு, 10% இட ஒதுக்கீடு என்பதை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாலேயே முற்றிலும் முடிந்துபோன விசயமாக கருத வேண்டியதில்லை என்றும் இது தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறுவது அவசியமாகிறது என்றும் தமுஎகச கருதுகிறது.

சு.வெங்கடேசன் எம்.பி                                                                      ஆதவன் தீட்சண்யா
மாநிலத்தலைவர்                                                                                             பொதுச்செயலாளர்