18 Oct 2019

கருத்துரிமை போற்றுதும் - பிரகடனம்


தனது எண்ணங்களையும் எதுவொன்றின் மீதான கருத்தையும் எதன்பொருட்டும் தயக்கமும் அச்சமும் இன்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ, தனக்குகந்த வேறு வடிவங்களிலோ வெளிப்படுத்தவும் பரப்பவும் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இந்த ஒன்றுகூடல் உயர்த்திப் பிடிக்கிறது.   

இயற்கை வளங்கள், பொதுச்சொத்துகள், கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகள், அறிவுலகச் செயல்பாடுகள், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் சாதனைகள், கல்வி, மருத்துவம், அரசதிகாரம் ஆகியவற்றில் தமக்குரிய நீதியான பங்கை கோரி பெறுவதற்கும் அதன்மூலம் தன்னுரிமையோடு வாழ்வதற்கும் தனிமனிதர்களை ஆற்றல்படுத்தவே அரசியல் சாசனம் கருத்துரிமையை வழங்கியிருக்கிறது. 

ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கத்தினரும் தமது குறுகிய நோக்கங்களுக்காக பல்வேறு சட்டத்திருத்தங்களை தொடர்ந்து புகுத்தியும், குடிமக்களின் சுதந்திர வேட்கையை ஒடுக்குவதற்காக காலனியாட்சியாளர்கள் கைக்கொண்டிருந்த ஆள்தூக்கிச் சட்டங்கள் பலவற்றை இன்னமும் பயன்படுத்தியும் கருத்துரிமை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவை பலவீனப்படுத்தி வருகிறார்கள். தனிமனித ஆளுமை, அறிவியல் மனப்பான்மை, சமத்துவக் கண்ணோட்டம், சமூக நல்லிணக்கம், சூழல் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை உள்ளடக்கி ஒட்டுமொத்த மக்களும் அடையும் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்கிற கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை ஒவ்வொரு நாளும் தீவிரமாகிவருவதை இந்த ஒன்றுகூடல் நாட்டு மக்களுக்கு கவனப்படுத்துகிறது. 

சமூக நிகழ்வுகளையும், அரசின் கொள்கைகளையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறவர்களை வாயடைக்கச் செய்வதற்காக அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் அவதூறுகளும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பொய்வழக்குகள், தனிமைக் கொட்டிலில் சிறைவைப்பு, உடல்ரீதியான சித்திரவதைகளால் மனோதிடத்தைக் குலைப்பது, வாழ்வாதாரங்களை அபகரிப்பது,  நடமாட்ட எல்லையை கட்டுப்படுத்துவது, தகவல்தொடர்புச் சேவைகளை முடக்குவது, மோதல் மரணம் என்கிற பெயரில் கொன்றொழிப்பது ஆகிய கொடூரமான வழிமுறைகளால் மாற்றுக்கருத்துகளையும் விமர்சனங்களையும் ஒடுக்கிவிட முடியாது என்கிற பாடத்தை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளும்படியும் சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும்  மத்திய மாநில அரசுகளை இந்த ஒன்றுகூடல் வலியுறுத்துகிறது.

மனிதர்களாகிய நம்மை சுதந்திரமாகவும் சமத்துவமாகவுமே இயற்கை பிறப்பிக்கிறது. ஆகவே இயற்கைநீதிப்படி நாம் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உரிமையுள்ளவர்கள் என்கிறது சர்வதேச மனித உரிமைப் பிரகடனம். மாற்றீடு செய்யமுடியாத இந்த உரிமையை அடைவதற்கு கருத்துரிமையே ஆதாரமாக இருக்கிறது என்கிற உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊடகர்களுமாகிய எமக்குள்ள கடப்பாட்டினை இன்றைய ஒன்றுகூடலின் மூலம் மறுவுறுதி செய்கிறோம். அவரவர்க்கு உகந்த கலை இலக்கிய வடிவங்களில் எமது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தி, நாகரீக வளர்ச்சியின் அளவீட்டுக் குறிமுள்ளை முன்னோக்கிச் செலுத்துவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

கருத்துரிமையின் மீதான தாக்குதல் எவ்வடிவில் வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்திட கலை இலக்கியம் ஊடகம் சார்ந்த அமைப்புகளின் பரந்தமேடை ஒன்றினை செயலொற்றுமை வாய்ந்ததாக உருவாக்குவது அவசியமென கருத்துரிமை போற்றுதும் ஒன்றுகூடல் கருதுகிறது.

இன்று இவ்வரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்களையும் கருத்துகளையும் இயன்ற வடிவங்களில் எங்கெங்கும் கொண்டு சேர்க்கும் பணியை உடனே தொடங்குவதன் மூலம் இப்பிரகடனத்தை ஒரு செயல்திட்டமாக மாற்றும்படி தமுஎகச கிளைகளையும் மாவட்டக் குழுக்களையும் இந்த கருத்துரிமை போற்றுதும் ஒன்றுகூடல் கேட்டுக்கொள்கிறது.