25 Sept 2019

பொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு!


ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் பகவத்கீதை உள்ளிட்ட மதநூல்கள் பாடமாக வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கை:

கற்றல் செயல்பாடு நடக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவை மதச்சார்பற்ற இடங்கள். கல்வியியல் செயல்பாட்டில் சூரியனுக்கு கீழுள்ள அனைத்தும் என்கிற நிலை மாறி சூரியனும்கூட கேள்விக்குட்படுத்தப்படும் என்பதை ஆய்வுகள் நிரூபித்த வண்ணமுள்ளன. இருப்பதை இருப்பதாக ஏற்பதெனில் அறிவியலோ, தொழில்நுட்பமோ வளராது. நியூட்டனின் ஆய்வு அடைந்த நிலையை மறுத்து முன்னேறியதுதான் ஐன்ஸ்டீன் நடத்திய ஆய்வின் நிலை. அதை மறுத்து கடந்தது தான் ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வு. 

ஆனால் மதம் என்பது வெறுமனே நம்பிக்கை அடிப்படையிலானது. நம்பிக்கையை நிரூபிக்கவேண்டிய தேவையில்லை என்றும், மதத்தத்துவங்களை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்றும் அறிவியலுக்குப் புறம்பான கருத்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில், மக்கள்தொகையில் ஒரு பிரிவினர் மட்டுமே நம்பும் பகவத்கீதை போன்ற மதநூல்களை பாடமாக வைப்பதென்னும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. இத்தகைய செயல் பிற மதத்தவரிடையே கசப்புணர்வை உருவாக்க வழிவகுப்பதுடன், அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய கல்வி வளரவும் உதவாது. 

சமயக்கல்வி கற்பிக்கும் (Theological Institute) நிறுவனங்களில் அனைத்து மதங்களின் நூல்களையும் பயில்வதற்கும் விவாதிப்பதற்கும் பாடமாக வைக்கவேண்டிய தேவை ஒருவேளை இருக்கக்கூடும். ஆனால் தொழில்நுட்பக் கல்லூரி / பல்கலைக்கழகத்தில் மதத்துவ நூல்களை பாடப்பகுதியாக வைக்கப்படுவது கல்விவளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையே.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றத்தகாத அடிப்படைக்கூறாக உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளதில் மதச்சார்பற்ற கோட்பாடும் அடங்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கில் சட்டப்பிரிவு 51ஏ(ஹெச்), மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதையும், சுயபரிசோதனை மேற்கொள்ளும் உணர்வை வளர்த்து சீர்திருத்தத்தை மேற்கொள்வதையும் தனது அடிப்படை கடமையென வலியுறுத்துகிறது. எனில் மதச்சார்பற்ற ஓர் அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் அரசு, தான் நிர்வகிக்கும் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மதச் சார்புடைய ஒரு மதத்தின் தத்துவத்தை கற்கச் சொல்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கோட்பாட்டிற்கு எதிரான செயல் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

ஏற்கனவே பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில், அப்படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடையே குன்றிவருகிறது. தற்காலத் தேவைக்கேற்ப பொறியியல் பாடங்களை நவீனமாக மேம்படுத்தும் நடவடிக்கையே இப்போதைய தேவை. அதை விடுத்து பகவத் கீதை போன்றவற்றை பாடத்தில் சேர்த்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை பொறியியல் படிப்பினை மதிப்பிழக்கச் செய்யும். சர்வதேச கல்விப்புலத்திலும், வேலைவாய்ப்புச் சந்தையிலும் நம் பொறியியல் பட்டதாரிகள் பின்தங்கும் நிலையை உருவாக்கும். எனவே அண்ணா பல்கலைக்கழகம் தனது பொறியியல் பாடங்களில் இடம்பெறச் செய்துள்ள மதச்சார்புடைய அனைத்து பாடங்களையும் உடனடியாக நீக்கவிட வேண்டும் என்று கோருகிறோம்.

எஸ்.சுப்பாராஜ், தேசிய செயலாளர், அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு
எஸ். சுப்பிரமணி, மாநிலச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வி.மாரியப்பன், மாநிலச்செயலாளர், இந்திய மாணவர் சங்கம்
எஸ்.பாலா, மாநிலச்செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்