22 Mar 2024

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதா? - தமுஎகச கண்டனம்

தனது இசைப்புலமைக்காகவும் துணிச்சலான எழுத்துக்காகவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ள கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சென்னை மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரியவர் என்ற வகையில் 2024 டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98ஆம் ஆண்டு இசை நிகழ்வுகளுக்கு கிருஷ்ணா தலைமை வகிப்பார். இம்முடிவினை எதிர்த்தும், கிருஷ்ணா தலைமை வகிக்கும் நிகழ்வில் பங்கேற்கமுடியாது என்றும் கர்நாடக இசைச் சகோதரிகள் எனப்படும் ரஞ்சனி – காயத்ரி ஆகியோர் தமது சமூக ஊடகப்பக்கத்தில் எழுதியுள்ள பதிவின் சொல்லும் பொருளும் கடும் கண்டனத்திற்குரியவை.



பார்ப்பனர்களை இனஅழிப்பு செய்யும்படி வெளிப்படையாகத் தூண்டிய, பார்ப்பனப் பெண்களை இழிவுபடுத்திய, பார்ப்பனர் மீதான வெறுப்புணர்வை இயல்புணர்வாக மாற்றிய பெரியாரைப் புகழ்ந்து பாடிவரும்  இந்த கிருஷ்ணாவுடன் (பெருமாள் முருகன் எழுதிய “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல்) தங்களால் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று பொருமியுள்ளனர். பெரியார் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னும்கூட அதே பொய்களை முன்வைத்து அவதூறு செய்துள்ளனர். 

அகில இந்திய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் அண்ணாமலையும் தங்களுக்குப் பிடித்த தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் இச்சகோதரிகளால் கிளப்பிவிடப்பட்ட “கிருஷ்ணா எதிர்ப்பு” விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், கிருஷ்ணமோகன் – ராம்குமார் மோகன் சகோதரர்கள் ஆகிய கலைஞர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. அவர்களும் கிருஷ்ணா தலைமையிலான விழாவில் பங்கேற்றால் தங்களது கெளரவத்துக்கு இழுக்கு இசைக்குத் தீட்டு என்கிற அளவுக்கு சகிப்பின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ரவீணை ரவிக்கிரண் என்பவர் என்னும் ஒருபடி மேலேபோய் ஏற்கனவே தனக்கு மியூசிக் அகாதமி வழங்கியிருந்த சங்கீத கலாநிதி விருதினை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.  
 
கர்நாடக இசையுலகில் நிலவும் பார்ப்பனராதிக்கம், பாலினப் பாகுபாடு, மதச்சாய்மானம், மேட்டிமைத்தனம், பழமைவாதம் ஆகியவற்றை கண்டித்தும், கர்நாடக இசையை ஜனநாயகப்படுத்தவும் எல்லா இசைமரபுகளுடனும் வகைமைகளுடனும் இணக்கம் பேணவும் கிருஷ்ணா சுதந்திரமாக பாடியும் எழுதியும் இயங்கியும் வருவது குறித்த ஒவ்வாமை மற்றும் வெறுப்பிலிருந்து  நொதித்துவருகிறது இந்த எதிர்ப்பு. மாற்றுக்கருத்தாளர்களை ஒதுக்கும் இந்த மனோபாவத்தைக் கண்டித்து, எல்லா கருத்தோட்டங்களையும் உள்ளடக்கியதான  கலைச்செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 
 
தோழமையுடன்
 மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்
 
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

 21.03.2024