13 Mar 2021

நர்சிங், உயிரியல் படிப்புக்கும் நீட்: தமுஎகச எதிர்ப்பு

 கல்வியாளர்களும் சமூகநீதிச் செயற்பாட்டாளர்களும் தெரிவித்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாது இந்திய ஒன்றிய அரசானது எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வினை கட்டாயமாக்கியது. இத்தேர்வினை திணிப்பதற்கு அரசால் விதந்தோதப்பட்ட தகுதி, திறமை, சமவாய்ப்பு, வெளிப்படைத்தன்மை போன்ற வாதங்கள் அனைத்துமே பொய்யானவை என்பதை நடப்பனுபவங்கள் உணர்த்தி வருகின்றன. பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி சில வருடங்களை வீணடித்து பயிற்சிமையங்களில் படித்து வருகிறவர்களால் மட்டுமே நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்கிற நிர்ப்பந்தத்தால் மனச்சோர்வுக்கும் ஆளுமைச்சிதைவுக்கும் ஆளாகும் மாணவர்களின் உயிரிழப்புகள் தொடர் அவலமாகிவருகிறது. சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கிய சமூக அடுக்குகளையும் கிராமப்புறங்களையும் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம் படிக்கும் உரிமையை இத்தேர்வு தட்டிப்பறித்துள்ளது. 

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வையே ரத்து செய்யவேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிவந்ததை பொருட்படுத்தாத ஒன்றிய அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோ மருத்துவப்படிப்புகளையும் நீட் சுழலுக்குள் தள்ளியது.  இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள நீட் 2021 அறிவிக்கையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மற்றும் உயிரியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விருப்பப்பூர்வமானதுதானேயன்றி கட்டாயமல்ல என்று இப்போதைக்கு சொல்லப்பட்டிருப்பதை, நர்சிங், உயிரியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்துவதற்கான முன்னோட்டம் என்றுணர்ந்து தமுஎகச எதிர்க்கிறது. 

நீட் தேர்வைத் திணித்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் அதற்கு துணைபோகும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் தகுந்தபாடத்தை தேர்தல் வழியே புகட்ட வேண்டும் என்று தமிழக மக்களை தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 

அன்புடன்

 மதுக்கூர் இராமலிங்கம் மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

 ஆதவன் தீட்சண்யா , பொதுச்செயலாளர்

13.03.2021