24 Feb 2021

கலை இலக்கியச் சமூகத்தின் கோரிக்கை சாசனம்

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநிலக்குழு

 

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் முனைப்பு கொண்டுள்ளன. கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையேயான ஒப்பந்தமாக வெளியாகவிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கைகள் தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டுச்செழுமை, வளர்ச்சி, சுதந்திரமான சிந்தனைக்கும் கலை இலக்கியச் செயல்பாட்டிற்கும் இசைவான சூழமைவினை உருவாக்குவது ஆகிய நோக்கங்களையும் அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அதனிமித்தமான இம்முன்மொழிவுகளை தமிழ்ச்சமூகமும் தமிழக அரசியல் கட்சிகளும் உரிய கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுமென தமுஎகச மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

 

1. கருத்துச்சுதந்திரம் என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்திய பிறகும் சுதந்திரமாக இருப்பதையே குறிக்கிறது. ஆனால் இங்கு நிலைமை அத்தகையதாய் இல்லை என்பதை அனுபவத்தில் கண்டுவருகிறோம். சுதந்திரமாகக் தமது கருத்தை வெளிப்படுத்துகிறவர்கள், குறிப்பிட்ட கருத்தை ஆதரித்தோ மறுத்தோ களப்பணியாற்றுகிறவர்கள், நடப்புகளை சமரசமின்றி விமர்சிப்பவர்கள் எனப் பலரும் இன்று கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். பொய்வழக்குகள், சிறை, கும்பல் மற்றும் அரசு சித்திரவதை, அவதூறுகள், தணிக்கை என்று ஒடுக்குமுறையின் கொடிய வடிவங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றும் முகத்தான், கருத்துரிமைச் செயல்பாட்டிற்காக கலை இலக்கியம், பண்பாடு, ஊடகம், பதிப்பகம் சார்ந்தவர்கள் மீது இப்போதைய அரசு தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும். சுதந்திரமான படைப்புச்செயல்பாடுகளையும் ஜனநாயகவழிப்பட்ட வாழ்முறையையும்  மறுதலிக்கிற கும்பல்கள் மீது நிலுவையிலுள்ள புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும்.  

 

அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்து வெளிப்பாட்டு  சுதந்திரம் தொடர்பாக  பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட நிபந்தனைப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

 

இலக்கியம், கலாச்சாரம் போன்ற விசயங்களைத் தீர்மானிப்பதற்கு அரசு, காவல்துறை அதிகாரிகள் சிறந்த நபர்களாக இருக்கமாட்டார்கள் என்றும் இத்தகைய விசயங்களை இந்தத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஞானத்திற்கும், தேவைப்பட்டால் நீதிமன்றங்களிடமும் விட்டுவிடுவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என்றும்  பெருமாள் முருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிமுறையை தமிழக அரசு கொள்கைப்பூர்வமாக ஏற்கவேண்டும்.

 

2. தமிழகத்தில் பல வருடங்களாகவே அறிவிக்கப்படாத ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 11 மணிக்குமேல் எல்லா நடமாட்டங்களையும் காவல்துறை முடக்கிப்போட்டு வருகிறது. மாலையில் தொடங்கி விடியவிடிய நிகழ்த்தப்படக்கூடியவையான நமது நிகழ்த்துக்கலைகள் காவல்துறையின் இந்த நேரக்கட்டுப்பாட்டால் நலிவடைந்து வருகின்றன. கலை இலக்கிய நிகழ்வுகளை பொருத்தமான இடத்தில் நேரத்தில் நடத்துவதற்கு அனுமதி மறுப்பது, நாற்பதுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதிப்பது, அனுமதி கொடுத்துவிட்டு சட்டமீறல் என்று வழக்கு பதிவது என காவல்துறை மக்களாட்சி மாண்புகளுக்கு பொருந்தாத விதத்தில் செயல்படுகிறது. அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளெல்லாம் ஒரு காவலதிகாரியின் கருணைக்குட்பட்டதாக இழியும் நிலை ஏற்கத்தக்கதல்ல.

 

பல்வேறு கலைக்குழுக்களை அழைத்து நேரப்பகிர்வு செய்யமுடியாத நிலையில் ஒருசில குழுக்களை மட்டுமே அழைத்தாலும் அவர்களுக்குரிய நேரத்தை ஒதுக்கமுடிவதில்லை. இதனால் கலைக்குழுக்களை நிகழ்வுகளுக்கு அழைக்கும் ஆர்வம் மட்டுப்பட்டுவருகிறது. இந்நிலைமையினை மாற்றும் பொருட்டு, கலை இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கு  நேரக்கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வதும் அவசியம்.

 

 மக்களிடமிருந்து தனிமைப்பட்டுவருகிற ஆட்சியாளர்கள் காவல்துறையின் வன்முறையைக் கொண்டு மக்களின் குரலை ஒடுக்க நினைப்பதும், காவல்துறையில் வரலாற்றுரீதியாக பரவியுள்ள ஒடுக்கும் மனோபாவமும் ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமானவை. அதன் தொடர்ச்சியில் பிரயோகிக்கப்படும் தேசத்துரோக சட்டம், அரங்கக்  கூட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி போன்ற பிரிட்டிஷ் ஆட்சிக்கால சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் 

 

3. கலை நிகழ்வுகளை மக்களின் பண்பாட்டு நடவடிக்கையாக கொண்டாட்டமாக பார்க்காமல் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளில் ஒன்றாகவும் தொந்தரவாகவும் கருதும் போக்கு காவல்துறையிலும் உள்ளூர் நிர்வாகங்களிலும் மேலோங்கியுள்ளது. இதனால் பொது இடங்களில்  நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்காமல் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு விரட்டும் அராஜகம் தொடர்கிறது. பொது இடங்களில் அனுமதி கிடைக்காத நிலையில் தனியார் கட்டிடங்களில் நடத்துவதற்கு பெருந்தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. காவல்துறையின் கெடுபிடி, அத்துமீறலால் இத்தகைய அரங்குகளைப் பெறுவதும் சிக்கலாகிவருகிறது.  

 

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும்  சுமார் ஆயிரம்பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் அளவில், அரசுக்கு சொந்தமான தரமான கலையரங்கங்கள் உள்ளன. அவை நாடகக்குழுவினருக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான அளவில் வாடகைக்குத் தரப்படுகின்றன. இதேபோல், இசைக்கச்சேரிகள், நாடகங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நிகழ்த்துவதற்கான தரமான கலையரங்கங்களை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அரசு உருவாக்கி  கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கவேண்டும். இடைக்கால ஏற்பாடாக, மாலை நேரங்களில் மற்றும் விடுமுறை தினங்களில் அரசு அலுவலக வளாகங்களிலோ பள்ளிகளிலோ இடம் ஒதுக்கி கட்டணமின்றி அல்லது குறைந்த வாடகையில் அவற்றை வழங்க உரிய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

 

4. தமிழ் மொழியின்  வரலாற்றை, வளர்ச்சியை, பண்பாட்டு வழமைகளைப் பேணுவதையும், கலை இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ் அகாதமி உருவாக்கப்பட வேண்டும்.  

 

தொன்மையான தமிழர் வாழ்வியலை காட்சிப்படுத்தும் வகையிலான அருங்காட்சியகம் ஒன்றை உலகளாவிய ஆய்வாளர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கும் தரத்தில் உருவாக்குவது இன்றியமையாதது.    

 

வட்டார மொழி இலக்கியத்திற்கென்று ஆய்வு மையம் மாவட்டங்களில் உருவாக்குதல். அதன் நிர்வாகக்குழுவில் அந்தந்த வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய அமைப்புகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குதல். இது, சுதந்திரமான கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கான மையமாக செயல்படவேண்டும்.

 

அகவை முதிர்ந்த எழுத்தாளர்கள் விரும்பினால் அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கி சன்மானத் தொகையைக்  காலமாற்றத்திற்கேற்ப உயர்த்தி வழங்கவேண்டும் 

 

எழுத்துத்துறையில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரது பங்களிப்புகளை ஊக்கப்படுத்திடும் விதமாக ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் அளவில் அரசின் விருது தொடங்கப்பட வேண்டும் 

 

5. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறை மாநிலத்திலுள்ள அனைத்துக் கலைஞர்களையும் மாவட்டவாரியாகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

 

சிறப்பு முகாம்கள் நடத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவரையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் நலவாரியத்தில் உறுப்பினராக்கும் பணியை அரசு நிறைவுசெய்திட வேண்டும்.

 

இயல் இசை நாடக மன்றம் ஏற்பாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கலைச்சங்கங்களுக்கும் குழுக்களுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும்.

 

 கலைமாமணி விருது தேர்வுக்குழுவில் நாட்டுப்புறக் கலைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். தேர்வுக்குழுவில் கல்விப்புலத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுவது நம்பகத்தை உருவாக்கும்.

 

கலைமாமணி விருதுகளில் திரைக்கலைஞர்களுக்கு நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர் என ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு விருது வழங்கப்படுவதுபோல, ஒவ்வொரு கலை வடிவத்தில் பங்கேற்கும் அனைத்துக் கலைஞர்கள் பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும். (எ.கா: தெருக்கூத்தில் நடிகர், ஆர்மோனியக் கலைஞர், முகவீணைக் கலைஞர், மிருதங்கக் கலைஞர், பின்பாட்டுக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர் என..)

 

கல்விக்கூடங்களில் நாட்டுப்புறக்கலைகளை பயிற்றுவிப்பது, நாட்டுப்புறக் கலைகளை அரசு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக்குவது, ஆண்டுக்கொரு முறை அரசின் சார்பில் நாட்டுப்புறக்கலைகளின் விழாவினை நடத்துவது ஆகியவற்றின் மூலம் இக்கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.  

 

சென்னையில் கடந்தகாலத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் பூங்காவில் பூங்காற்று, கடற்கரைக்காற்று, கல்லூரி பள்ளிகளில் கிராமியக் கலைவிழா எனப் பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டக் கலைஞர்கள் 30,000 பேர் அவற்றில் பங்குபெற்றுப் பலனடைந்தனர். அந்த நிகழ்வுகளை மீண்டும் கொண்டுவர வேண்டும். இதைப்போல அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

 

கலைஞர்களுக்கு அரசு வழங்குகிற சீருடை நிதி, இறந்தோருக்கான நிதி ஆகியவற்றை தாமதமின்றி உடனுக்குடன் வழங்கிட வேண்டும். நலவாரிய உறுப்பினர்களின் இயற்கை மரணத்துக்கு வழங்கப்படும் ரூ.25,000, விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ரூ.1,00,000 என்னும் தொகையளவு உயர்த்தப்பட வேண்டும். இதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து முறையாக உடனுக்குடன் வழங்கவேண்டும்.

 

மூத்தக் கலைஞர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000 என உயர்த்துவதுடன் பெண் கலைஞர்களுக்கு 50வயது முதலே ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். வீடில்லாத மூத்தக் கலைஞர்களுக்கு அரசு செலவில் வீடு கட்டித் தர வேண்டும்.

 

நாட்டார் நிகழ்த்துக்கலை ஆவணக் காப்பகம், நமது மண்ணின் ஆயிரக்கணக்கான கலைக்கருவிகளை பாதுகாத்து பேணும் விதமாக மாநில அளவிலான அருங்காட்சியகம் ஆகியவை பன்னாட்டு கலை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அணுகும் விதமாக உருவாக்குதல் அவசியம்.

 

 மாவட்டத் தலைநகரங்களில் நாட்டுப்புறக் கலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு மையம் தொடங்கப்பட வேண்டும். இவற்றை ஒருங்கிணைத்து நாட்டுப்புறக் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்குவதும் அவசியம்.

 

நாட்டுப்புறக்கலைஞர்கள் என்கிற வகையினத்தில் வராத மெல்லிசைக் கலைஞர்கள், மங்கள வாத்தியக்கலைஞர்கள் [நாகஸ்வரம், தவில்] போன்ற பிற கலைஞர்களது சேமநலத்துக்கான திட்டங்களை அரசு வரையறுத்து செயலாக்கிட வேண்டும்

 

6. தமிழகத்தில் தொல்லியல் சான்றுகள் உள்ள பகுதிகளை இனங்காண ஆய்வாளர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதுடன், அவ்விடங்களில் எவ்விதமான வணிக, கனிம நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தடுப்பதும் அவசியம்.

 

தொல்லியல் சான்றுகள் மூலம் பெறப்படுகிற ஆய்வுண்மைகள் வரலாற்றைச் செழுமைப்படுத்துவதற்கு ஆற்றும் பங்கினை சமகாலக் கல்வியில் இடம்பெறச் செய்யவேண்டும்.

 

நிறைவடைந்த அகழாய்வுகளின் அறிக்கைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

 

7. தேசிய இனங்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் தனித்துவத்தைப் பேணவும் சமகாலத்திற்குரிய அறிவாற்றல்களுடன் வளர்த்தெடுக்கவும் உகந்த வகையிலான கல்வியே சமூகத்தின் தேவையாக உள்ளது. இதன்பொருட்டு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.

 

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்விவரை தாய்மொழி வழியிலான பயிற்று முறையை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

8. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக்கிளையில்  வழக்காடு மொழியாகத் தமிழைப்  பயன்படுத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற வலியுறுத்தவேண்டும் 

 

தமிழ்மொழிக்கான  பொதிகைத் தொலைக்காட்சி அலைவரிசையில் சமஸ்கிருதச் செய்தி ஒளிபரப்பை நிறுத்த ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

 

9. தமிழ்நாட்டில் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் பணிகளிலும், தனியார்துறை பணிகளிலும் தமிழ்நாட்டவர்க்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசுப்பணிகளில் தவிர்க்கவியலாமல் பிற மாநிலத்தவரை நியமிப்பதாயின் அவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பிறகே நியமிக்கவேண்டும். 

 

10. வாழ்வாதாரம் தேடி தமிழகத்தின் உழைப்புச்சந்தைக்கு வரும் பிற மாநிலத்தவர் கண்ணியமாகவும் பண்பாட்டு தனித்துவத்துடனும் வாழ்வதற்கு உரிமையுடையவர்களே. ஆனால் அவர்களை உள்ளூர்வாசிகளாக அங்கீகரித்து ஆதார் அட்டை வழங்குவதானது தமிழகத்தில் திட்டமிட்ட குடியமர்த்துதல் நடைபெறுகிறதோ என்கிற ஐயத்தை உருவாக்குகிறது. இந்நிலை தொடருமானால் அவர்களை வாக்காளர் பட்டியலிலும் சேர்க்கும் நிலை உருவாகும். குடிமக்கள் பரம்பலிலும் தமிழக மக்களின் பண்பாட்டு அரசியல் தெரிவுகளிலும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் இவ்விசயத்தை உரிய முக்கியத்துவமளித்து விவாதித்து முடிவெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

11. அரசு நிகழ்வுகளில் பொன்னாடை போர்த்துவது, மாலைகள் அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது போன்றவற்றுக்கு  பதிலாக புத்தகங்கள் அல்லது கைவினைக் கலைஞர்களின் கலைப்பொருட்களை பரிசாக அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவேண்டும் 

 

12. பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் தனியாக இயற்றப்பட வேண்டும் 

 

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் கேரளாவைப் போல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory pension scheme )  செயல்படுத்த வேண்டும் 

 

பத்திரிகையாளர் நலத்திட்டங்களை முன்பிருந்ததுபோல் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நேரடியாக அமல்படுத்தவேண்டும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் என்ற சிவப்பு நாடா முறை நீக்கப்பட வேண்டும்.

 

பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்னையில் இடம் ஒதுக்கவேண்டும் 

 

பத்திரிகையாளர் நலத்திட்டங்கள் உரியவர்களுக்குக் கிடைக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 

13. கர்நாடக மாநிலத்தில் மைசூர், தார்வார், குல்பர்கா, உடுப்பி  ஆகிய நகரங்களில் ‘ரங்காயனா’ எனும் பெயரில் அரசுக்கு  சொந்தமான நாடகக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்களின் கலைஞர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சை, கோவை திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் அரசுக்கு சொந்தமான நாடகக்குழுக்கள் உருவாக்கப்படவேண்டும். இக்குழுக்களின்  கலைஞர்கள் அரசு ஊழியர்களாக்கப்பட்டு மாத ஊதியம் வழங்கப்படவேண்டும். இக்குழுக்கள் அரசுத்திட்டங்களை பரப்புரை செய்கிற நாடகங்களை செய்வதோடு மட்டுமன்றி ஆண்டிற்கு இரண்டு நவீன நாடகப்படைப்புகளை உருவாக்கி அவற்றை மாநிலம் முழுதும் பயணம் செய்து நிகழ்த்தவேண்டும். ஒவ்வொரு அரசுத்துறையும் Information Education Communication என்கிற வகையில் செலவு செய்கிற நிதியில் பத்தில் ஒரு பங்கு  ஒதுக்கினாலே போதும்  இத்திட்டத்தை எளிதில் சாத்தியமாக்கலாம்.

 

அரசே முன்வந்து அரசியல் சாசன நோக்கங்களை, சமூக சீர்திருத்தக் கருத்துகளை, அறிவியல்பூர்வமான உள்ளடக்கங்களை முன்வைத்து வட்ட அளவில் நாடகப் போட்டிகளை, நாடகவிழாக்களை நடத்தவேண்டும். இவை நாடகச்செயல்பாடுகளுக்கு புத்துணர்ச்சி வழங்க உதவிடும்.

 

பெருநகரங்களில் நாடகக்குழுக்கள் மாலைநேரங்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஒத்திகை பார்ப்பதற்கு அரசு அலுவலக வளாகங்களிலோ பள்ளிகளிலோ இடம் ஒதுக்கி குறைந்த வாடகையில் அவற்றை வழங்க முன்வர வேண்டும்.

 

14. மாநகராட்சி, நகராட்சி பேருந்து நிலையங்களில் அரசுக்கு சொந்தமான கடைகளில் ஒரு கடையை சலுகை வாடகையில் புத்தகக்கடைக்கென வழங்கிட அரசாணை  இருக்கிறது.  ஒரு கடை என்பதை இரட்டிப்பாக்குவதுடன், இவ்வாணை முறையாக செயலாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்களை அவ்வாண்டின் இறுதியிலேயே நூலகங்களுக்கு கொள்முதல் செய்திடவேண்டும். நூலக ஆணைக்குப்  பரிந்துரைக்கப்படும் நூல்கள் வாங்குவதில் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன்  பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் பெயர்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்களைப் பொதுத்தளத்தில் (Public Domain) வெளியிட வேண்டும். 

 

நூலக ஆணைக்குழுவில் எழுத்தாளர்களுக்கும் இலக்கிய அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

 

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் நூலக வரியை நூலக மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 

அண்ணா ஊர்ப்புற நூலகங்களை மறு சீரமைப்பு செய்து ஆண்டுதோறும் புதிய நூல்கள், பத்திரிகைகள், பருவ இதழ்கள் வாங்கப்பட வேண்டும்.

 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை இருப்பதையும் மாதம் ஒரு முறை நூல் அறிமுகம், நூலகப் பயன்பாடு பற்றிய ஆளுமைகளின் உரை நிகழ்வுகளையும் உறுதிசெய்து இளம்பருவத்தில் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். 

 

 மக்களிடையே புத்தகப் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, உலகப் புத்தக தினத்தை மாவட்டம்தோறும் அரசு விழாவாக – புத்தகக் கண்காட்சிகளாக நடத்துவது அவசியம்.  சென்னையில் தேசிய, சர்வதேச புத்தகக் கண்காட்சிகளை அரசே நடத்திட முன்வர வேண்டும்.

 

 குழந்தை இலக்கிய நூல்களுக்கு தனி நிதி ஒதுக்கீடும், தனி நூலக ஆணையும் பிறப்பிக்க வேண்டும். நூல் தேர்வுக்கு தனித்துவமான விதிமுறைகள் உருவாக்கப்படுவது அவசியம்.

 

பதிப்பாளர் நல வாரியத்தை மேம்படுத்தி பதிப்பகத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

 

15. கேரளா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் போல தமிழகத்திலும் திரைப்படத் துறையை ஒரு தொழிலாக அரசு அங்கீகரிக்க வேண்டும்.

 

திரைப்படங்கள் மீதான உள்ளூர் வரியை கைவிட வேண்டும்.

 

புதிய திரையரங்குகளைத் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிதாக்கிட ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்துவது உதவிகரமாக அமையும். திரையரங்க உரிமத்தை ஆண்டுக்கொரு முறை புதுப்பிப்பதற்கு பதிலாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்கிற திருத்தம் தேவை.

 

திரையங்க நுழைவுச்சீட்டுக்கான இணையவழி முன்பதிவின் மீதான சேவை வரி 5 சதவீதத்திற்குள் இருத்தல் அவசியம்.

 

திரைப்படத் துறையில் தினப்படி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நாட்களுக்கான வாழ்வாதாரம், அவர்களுக்கான ஓய்வூதியம் குறித்த கொள்கை முடிவினை அரசு உருவாக்க வேண்டும்.

 

சென்னை ரிப்பன் மாளிகை அருகே உள்ள விக்டோரியா பொதுமண்டபத்தில் தான் 1897 ஆம் ஆண்டு முதன்முதலாக திரைப்படம் காண்பிக்கப்பட்டது. பழுதடைந்த அவ்வரங்கம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை திரைத்துறையின் வரலாற்று அருங்காட்சியகமாகவும் திரைப்பட ஆவணக் காப்பகமாகவும் மாற்றவேண்டும்.