4 Aug 2020

அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக மத நிகழ்வுகளில் அரசு ஈடுபடக்கூடாது : தமுஎகச

பரவலான விமர்சனங்களை எதிர்கொண்ட ஒரு தீர்ப்பின்மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழிகோலிவிட்டது. எனினும் அங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்ட விரோதம், குற்றச்செயல் என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் அங்கு 2020 ஆகஸ்ட் 5 அன்று கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடக்கவுள்ளது. இந்த நிகழ்வில் உத்திரபிரதேச அரசிலும் மத்திய அரசிலும் தலைமைப்பொறுப்பில் உள்ள பிரதமர் உள்ளிட்ட பலரும் பங்கெடுக்க இருப்பதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. தனிப்பட்ட ஓர் அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்நிகழ்வில் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள இவர்கள் பங்கெடுப்பதானது, அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்குப் புறம்பானதாகிவிடும் எனக் கருதுகிறது தமுஎகச.
மத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை குடிமக்களுக்கு வழங்கும் நமது அரசியல் சாசனம், அரசானது எந்தவொரு மதத்தையும் சாராமல் இருக்கவேண்டும் எனப் பணிக்கிறது. இவ்வாறு மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் அரசியல் சாசனத்தின் பெயரால் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் உள்ளிட்ட எவரொருவரும் தனிப்பட்ட ஓர் அமைப்பின் மதச்சார்பு நடவடிக்கையான ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கெடுக்க வேண்டாமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது.  


அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

ஆதவன் தீட்சண்யா,
பொதுச்செயலாளர்