கந்தசஷ்டி கவசம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டதற்காக கறுப்பர் கூட்டம் வலைக்காட்சியாளர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யும் அளவுக்கான குற்றமா இது என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, குறிப்பிட்ட இந்த ஒரு காணொளி மீதான புகாருக்காக காவல் துறையினர் கறுப்பர் கூட்டம் சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவசரடியாக அழித்துள்ளனர். குற்றச்சாட்டை நிரூபிக்காமலே அதிகார வரம்பை மீறி காவல்துறை மேற்கொண்ட இச்செயல் சட்டவிரோதமானது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கொடிய தாக்குதல் என்று பரவலாக கண்டனம் எழுந்தது. தமுஎகச நடத்திய ஊடக உரிமை மாநாட்டில் பேசிய ஆளுமைகள் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே கைதாகியிருக்கும் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது இன்று (27.07.2020) குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலென தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. கலை இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடகங்களின் பதிவர்கள், பெண்ணியவாதிகள், அரசியல் ஆளுமைகள், சூழலியலாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மீது அன்றாடம் அவதூறுகளைப் பரப்பி அச்சுறுத்தும் சங்பரிவாரத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிற காவல்துறை, கறுப்பர் கூட்டத்தின் மீதான புகார்மீது இவ்வளவு கடுமையும் வேகமும் காட்டுவது பாரபட்சமானது, கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் இந்த வரம்புமீறியச் செயலை தடுக்கும் வகையில் சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று தமிழக அரசை தமுஎகச வலியுறுத்துகிறது.
அன்புடன்
மதுக்கூர்இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )
ஆதவன் தீட்சண்யா,
பொதுச்செயலாளர்