12 Jan 2020

பபாசியின் செயலுக்கு தமுஎகச கண்டனம்


தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சென்னையில் நடத்திவரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் ‘மக்கள் செய்தி மையம்’ என்கிற தனது கடையில் அரசையும் அரசாங்கத்தையும் விமர்சிக்கிற புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமுஎகச தனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தடைசெய்யப்பட்ட புத்தகங்களை விற்கக்கூடாது என்கிற பபாசியின் விதியையே அது மறுபரிசீலனை செய்தாக வேண்டிய காலகட்டத்தில் அரசை விமர்சிக்கிற புத்தகங்களை விற்பனைக்கு வைத்ததன் மூலம் விதிமீறல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி ‘மக்கள் செய்தி மையத்தின்’ கடையை காலி செய்திருப்பதை ஏற்கமுடியாது. 

எந்தவொரு நூலும் அது எழுதப்படும் காலம் இடம் மாந்தர் நிகழ்வுகள் மீதான விமர்சனத்தை தன்னளவில் கொண்டிருப்பதே. எனில் அரசும் அரசாங்கமும் விமர்சனத்திற்குள்ளாவதும் தவிர்க்கமுடியாது. மட்டுமல்ல, இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையுமல்ல. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் வலுவில் பன்முகப்பட்ட கருத்ததோட்டங்களை உள்ளடக்கி வெளியாகும் புத்தகங்களை அணிதிரட்டி கண்காட்சியை நடத்தும் பொறுப்பை ஏற்றிருப்பதாலேயே கடைகளில் விற்கப்படும் நூல்களின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யும் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள பபாசி மேற்கொண்டுள்ள முயற்சி கண்டனத்திற்குரியது. ஒரு நூல் முன்வைக்கும் கருத்தை மறுப்பதும் விளக்கம் சொல்வதுமாகிய ஜனநாயகப்பண்புகளுக்கு விரோதமாக அந்த நூலை விற்றதற்காக கடையை காலிசெய்யுமாறு நெருக்கடி கொடுத்ததுடன் அதன் தொடர்ச்சியில் புகார், கைது என பபாசியின் அடுத்தடுத்த நகர்வுகளில் அதிகாரத்துவப் போக்கே வெளிப்படுகிறது. 

அரசை விமர்சிக்கிற புத்தகங்களை விற்கக்கூடாதென்கிற நிலைப்பாட்டின் மூலம் பபாசி சுயேச்தைத் தன்மையற்று ஆட்சியாளர்களின் தொங்குசதையாக தாழ்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது. எனில், இத்தனை ஆண்டுகளாகவும் இப்போதும் அரசை ஆதரிக்கும் புத்தகங்களுக்கு மட்டுமேயான கண்காட்சியை பபாசி நடத்திக் கொண்டிருக்கிறதா?  அல்லது இந்த ஆண்டிலிருந்து அப்படியான கண்காட்சியைத்தான் இனி நடத்தப்போகிறதா? மக்கள் செய்தி மையம் தவிர்த்த மற்ற கடைகளில் விற்கப்படும் அனைத்து நூல்களும் அரசுக்கு ஆதரவானவை என்று பபாசியால் அறிவிக்க முடியுமா?

அரசையும் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகங்கள் விற்பதை அனுமதிக்கக் கூடாது என்று ஆட்சியாளர்களோ காவல்துறையினரோ பபாசிக்கு ஏதேனும் நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் அதை வெளிப்படையாகத் தெரிவித்து கருத்துரிமைக்கு ஆதரவான சக்திகளின் துணையுடன் எதிர்கொள்வதுதான் சரியான வழியாக இருக்கமுடியும். அதைவிடுத்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பபாசியை ஆட்சியாளர்களின் தொங்குசதையாக மாற்றிடும் போக்கு கைவிடப்பட வேண்டும்.

திரு. அன்பழகன் மீதான புகாரை திரும்பப்பெறுவதுடன் அவர் உடனடியாக விடுதலையாகி தனது கடையை புத்தகக் கண்காட்சியில் மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பபாசி நிர்வாகிகளை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.   

சு.வெங்கடேசன் எம்.பி                                             ஆதவன் தீட்சண்யா
மாநிலத்தலைவர்                                                       பொதுச்செயலாளர்