7 Jan 2020

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அறிதலரங்கம் - தீர்மானம்


குடியுரிமை திருத்தச்சட்டம், அதன் தொடர்ச்சியில் தயாரிக்கப்படவிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு  ஆகியவை அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கும் வெகுமக்களின் நலன்களுக்கும் எதிரானது என இக்கருத்தரங்கம் கருதுகிறது.  அஸ்ஸாம் அனுபவங்களைக் கொண்டு  இம்மூன்றிலுமுள்ள ஆபத்துகளை உணர்ந்து அவற்றை கைவிடக்கோரி நாடுமுழுவதும் போராடிவருகிற கோடானுகோடி தேசபக்தர்களோடு இக்கருத்தரங்கம் ஒருமைப்பாடு கொள்கிறது. சமத்துவம், மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாடு ஆகிய அரசியல் சாசன மாண்புகளை உயர்த்திப் பிடிக்கப் போராடும் இம்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுவரும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் இக்கருத்தரங்கம் தன் முழுச்சக்தியோடு கண்டிக்கிறது.

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு  ஆகியவற்றை விளக்கவும் மாற்றுக்கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவிக்கவும் பொறுப்பு வாய்ந்த குடிமக்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுக்கும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுவதை இக்கருத்தரங்கம் ஏற்கவில்லை. ஆட்சிமுறைமையின் மீது கருத்துகூற அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அமைதிவழிப் போராட்டங்களை நடத்திட அனுமதிக்கவேண்டும் என்கிற நீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் வழிநின்று போராடிவருவோர் மீது  இக்காலக்கட்டத்தில் தொடுக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொய்வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். 

போராடும் மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் மதித்து நாட்டின் நிலப்பரப்பில் 54 சதவீதத்தையும் மக்கள்தொகையில் 56 சதவீதத்தையும் கொண்டுள்ள 11 மாநிலங்களின் முதல்வர்கள் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு  ஆகியவற்றை தமது மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்திருப்பதை இக்கருத்தரங்கம் பாராட்டி வரவேற்கிறது. இதே அறிவிப்பைச் செய்யுமாறு தமிழக அரசையும் வலியுறுத்தும் இக்கருத்தரங்கம், இதன்தொடர்பில் கேரள மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளதைப் போன்ற தீர்மானத்தை தமிழகம் உள்ளிட்ட  ஏனைய மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகிறது.



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
ராஷ்ட்ர சேவா தளம்