20 Jan 2019

கல்விக்கூட செயல்பாடுகளையும் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் முடக்கும் சங்பரிவாரத்தினருக்கு தமுஎகச கண்டனம்

கல்விக்கூட செயல்பாடுகளையும் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் முடக்கும் சங்பரிவாரத்தினருக்கு  தமுஎகச  கண்டனம்

சென்னை இலயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மன்றமும், மாற்று ஊடக மையமும் இணைந்து ஆறாம் ஆண்டு வீதி விருது விழாவை 2019  பிப்ரவரி 19, 20 தேதிகளில் நடத்தின.  இவ்விழாவின் ஓரங்கமாக,  சமகால நடப்புகளை துல்லியமாகவும் கலைநேர்த்தியுடனும் விமர்சிக்கும் ஓவியங்களின் கண்காட்சியும் நடந்தது. ஆனால் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஓவியங்கள் ஆட்சேபகரமாக இருப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட சில சங்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த ஓவியங்களை நீக்கியதுடன், இதற்காக பகிரங்க மன்னிப்பையும் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் தாங்கள் பூதாகரப்படுத்த நினைத்த ஒரு விசயம் இப்படி உடனடியாக சுமூக முடிவை எட்டுவதை பொறுக்காத சங் பரிவாரத்தினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மட்டுமல்லாது, மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் முனைவர் காளீஸ்வரன், அவரது வாழ்விணையர், ஓவியர் முகிலன் ஆகியோரை செல்பேசியில் அழைத்து கடுமையாக மிரட்டியும் அருவருப்பாக ஏசியும் வருகின்றனர்.   

கல்விக்கூட வளாகச் செயல்பாடுகளையும் கலை இலக்கிய நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதன் மூலம் அவற்றின் சுதந்திரத்தன்மையை பறிப்பதுடன், தமக்கெதிரான விமர்சனங்களையும் தடுத்துவிட முடியுமென சங் பரிவாரத்தினர் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தங்களுக்கு தனிப்பெரும் அதிகாரம் இருப்பதாக அடாவடி செய்துவரும் சங் பரிவாரத்தினரின் இப்போக்கிற்கு எதிரான கண்டனத்தை எழுப்புமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. இயோலா கல்லூரி கல்விசார் பணிகளை இடையூறின்றி தொடரவும், முனைவர் காளீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓவியர் முகிலனுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை  தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
சு.வெங்கடேசன், மாநிலத்தலவர்                              ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்