19 Feb 2019

மனிதவுரிமை, சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே?

மனித உரிமை, சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே?

மனிதஉரிமை, சூழலியல் களங்களில் மதிப்பார்ந்த பணிகளை ஆற்றிவருபவர் தோழர் முகிலன். சுற்றுச்சூழலுக்கு கேடான ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி  போராடியவர்கள் மீது கடந்தாண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொலி ஆவணத்தை 15.02.2019 அன்று சென்னையில் வெளியிட்டிருக்கிறார். தீவைப்பு வன்முறையை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இதுவரை பரப்பப்பட்டு வந்ததை மறுத்து உண்மைத்தன்மையைக் காட்டுகிறது இந்த ஆவணம். எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையும், தொடர்ந்து ஸ்டெர்லைட்டின் கும்பல் ஒன்று தீவைப்பில் ஈடுபட்டதையும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கண்காணிப்புக்கருவிகளின் பதிவுகளையும் தொலைக்காட்சிப் பதிவுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டு முகிலன் நிறுவுகிறார். இதுதொடர்பில்  பொய்யான தகவல்களை தெரிவித்த காவல், தீயணைப்பு, வருவாய்த்துறை மற்றும் ஸ்டெர்லைட் அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை இந்த ஆவணத்தின் வழியே முகிலன் கோரியுள்ளார். 

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு 16.02.19 அன்று இரவு சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பிய முகிலன் இப்போதுவரை மதுரைக்கு வந்து சேரவில்லை. அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கும் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உண்மையை வெளிக்கொணர்ந்த முகிலன் காணாமல் போயிருப்பது அசாதாரணமானது, சட்டத்தின் ஆட்சிதான் இங்கே நடக்கிறதா என்கிற ஐயத்தை எழுப்பக்கூடியது. அவரை மீட்டுத்தரவும், அவர் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி தமிழக அரசை  தமுஎகச  கேட்டுக்கொள்கிறது. 

சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்,                          ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்