9 May 2023

கவிஞர் விடுதலை சிகப்பி மீது பொய்வழக்கு: கருத்துரிமைக்கு அச்சுறுத்தல்

தமுஎகச கண்டனம்
 
மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்தொழிவதற்கென்றே ஒருசில சாதிகளை கடவுள்கள்தான் படைத்தனரென சொல்லப்பட்டால், அந்தக் கடவுளர்கள் ஒருநாள் இறங்கி, அந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாய் உணரட்டும் என்கிற மெய்யாவேசத்துடன் எழுதப்பட்டதுதான் விடுதலை சிகப்பியின் கவிதை. ஆனால் இக்கவிதை கடவுள்களை அவமதித்துவிட்டதாகவும் தங்களது மனதை புண்படுத்திவிட்டதாகவும் திரித்து பாரத் இந்து முன்னணி என்கிற அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத்தலைவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பொய்ப்புகாரளித்துள்ளார். கலை இலக்கிய வெளிப்பாடுகள் பற்றிய நீதிமன்றத் தீர்ப்புகளின் வெளிச்சத்தில் இந்தப் புகாரின் மெய்த்தன்மையை சரிபார்க்காமல் அவசரகதியில் விடுதலை சிகப்பியின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதற்கு தமுஎகச கண்டனம் தெரிவிக்கிறது. 
 
“ஆபாசத்தை மதிப்பிடும் நோக்கத்திற்கு, அவ்வாறு மதிப்பிடுபவர், முதலில் படைப்பாளி உன்மையிலேயே எதைச் சொல்லவருகிறார் என்பதை உணர, படைப்பாளியின் தரப்பில் நின்று அதைப் பார்த்த பிறகு, அதைப்படிக்கும் வாய்ப்புள்ள ஒவ்வொரு வயதுப்பிரிவைச் சேர்ந்த வாசகரின் நிலையில் நின்று அதைப் பார்த்துவிட்டு, அதன்பிறகே விருப்புவெறுப்பற்ற ஒரு முடிவிற்கு வர வேண்டும்” என்கிறது சமரேஷ் போஸ் (எதிர்) அமல் மித்ரா (1985) 4 எஸ்.சி.சி.289 என்ற வழக்கின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் கருத்தை ஏற்றுத்தான், இந்துக்களால் வணங்கப்படும் ஆண் பெண் தெய்வங்களை எம்.எஃப்.ஹூசைன் தனது ஓவியங்களால் அவமதிப்பதாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட ‘மக்பூல் ஃபிடா ஹூசைன் (எதிர்) ராஜ்குமார் பாண்டே, 2008 குற்.எல்.ஜே.4107 என்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பெருமாள் முருகன் மீதான வழக்கின் தீர்ப்பிலும் இத்தீர்ப்பு வழிகாட்டலாக எடுத்தாளப்பட்டுள்ளது. 
 
‘நாவலைப் படித்த பிறகு வாசகரின் நெஞ்சைத் தொடும் விசயம் என்ன?’, ‘…அதன் உண்மையான கருத்தோட்டம், கதைக்கரு ஆகியவற்றின் மூலமே இந்த நாவலைப் புரிந்துகொள்ள வேண்டும். உரையாடல்களை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ள மண்சார்ந்த மொழி அல்லது மேலும் அதிகமான வசைச்சொற்களை பயன்படுத்தியுள்ளதைக் வைத்துக்கொண்டே நூலாசிரியரிடம் சண்டையிழுக்க முடியாது’ என்று பெருமாள்முருகன் மீதான வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்து விடுதலைசிகப்பியின் கவிதைக்கும் பொருந்தும். ஆனால் இந்தத் தீர்ப்புகளுக்குப் புறம்பாக அபிராமபுரம் காவல்துறையினர் விடுதலை சிகப்பியின் மீது பதிந்துள்ள வழக்கினை தமிழ்நாடு அரசு ரத்துசெய்ய வேண்டும். 
 
பாகுபாடும் ஒடுக்குமுறையும் கொண்ட தங்களது கருத்தியலுக்கு எதிரான விமர்சனங்கள் வெளிப்படுவதைத் தடுப்பதற்காக ‘மனம் புண்பட்டுவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு வரும் சனாதனக்கும்பலின் அரசியல் அழுத்தங்களுக்கு காவல்துறையினர் பணிந்துவிடாதபடி தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும். மேலும் “கருத்துகள் தொடர்பாக உருவாகும் இத்தகைய மோதல்களால் உருவாகும் நிலைமைகளை சமாளிக்கும் வகையில் நிபுணர்கள் குழு ஒன்றை அரசு உருவாக்க இதுவே சரியான தருணமாகும். படைப்பிலக்கியம், கலை போன்ற துறைகளைச் சேர்ந்த தகுதியான நபர்களைக் கொண்டதாக இந்த நிபுணர்கள் குழு இருக்க வேண்டும்” என்று பெருமாள் முருகன் தீர்ப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட குழுவை தமிழ்நாடு அரசு உடனே அமைக்கவேண்டும் என்று தமுஎகச கோருகிறது.
 
 
இவண்
 
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்                                               
ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்

09.05.2023