10 Mar 2022

திருநெல்வேலி எழுச்சி: நினைவுச்சின்னம் அமைத்திடுக!

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுடர்விடும் நிகழ்வாக அமைந்தது 1908ஆம் ஆண்டின் திருநெல்வேலி மக்கள் எழுச்சி.
பிபின் சந்திர பால் விடுதலையைக் கொண்டாடப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டுப்போன மக்கள் தலைவர் வ.உ.சி. அவர்களை வஞ்சகமாகக் கைது செய்து கோவைச் சிறைக்கு அனுப்பியது வெள்ளையராட்சி. அதைக் கண்டித்து 1908 மார்-13 அன்று திருநெல்வேலி மக்கள் கொந்தளித்து எழுந்தனர். பொதுமக்களும் மாணவர்களும் இணைந்த எழுச்சி ஊர்வலத்தின் போது காவல் நிலையம் தாக்கப்பட்டது. மண்ணெண்ணெய்க் கிடங்கிற்கு மூட்டப்பட்ட தீ மூன்று நாட்களாக எரிந்து கொண்டிருந்தது. மக்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருந்தது. காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் நான்குபேர் கொல்லப்பட்டனர். ஒரு இஸ்லாமியர், பட்டியல் சமூகத்தவர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பிரிவு மக்களின் குருதியும் ஒன்று கலந்து நெல்லை மண்ணில் ஓடியது. சாதி மதம் கடந்து வாழ்வின் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்த மக்கள் காவல்துறையின் தாக்குதலை தீரமுடன் எதிர்கொண்டனர். இதுவே நம் விடுதலைப் போராட்டத்தின் தன்மையைக் குறிக்கும் குறியீடாக இன்றைக்கும் பிரகாசிக்கிறது. 
 
இத்தகைய மக்கள் எழுச்சிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை அதற்குரிய அரசியல் திட்பத்துடனும் கலை நுட்பத்துடனும், மக்கள் பேரணியாகச் சென்ற அதே சாலையில் நிறுவுவது அவசியம். வரலாற்றாளர்களின் இக்கோரிக்கையை ஏற்று அதற்கான ஓர் அறிவிப்பை இந்த மார்ச் 13 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென தமுஎகச கருதுகிறது. பகைமை அரசியல் முன்னெடுக்கப்படும் இன்றைய நாளில் அதற்கெதிரான ஓர் ஒற்றுமைச் சின்னமாக அது அமையும். மேலும் இத்தியாகிகளின் பெயர்கள், ஒன்றிய அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் தொகுக்கப்படும் “விடுதலைப் போராட்டத் தியாகிகள் அகராதி”யில் உரிய முறையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென தமுஎகச கோருகிறது. 

அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)                         
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்    

10.03.2022