7 Jul 2020

ஊடகவியலாளர்களை மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்

07.07.2020

தற்போதைய மத்திய அரசின் கீழ் ஊடகச்சுதந்திரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது. ஊடகங்களை அரசின் ஊதுகுழலாக மாற்றும் இழிமுயற்சிக்கு இணங்காமல்  மக்களின் கண்ணோட்டத்திலிருந்து அரசை விமர்சிக்கின்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு பதிவது, ஒளிபரப்பை நிறுத்துவது, கைது செய்வது, சிறைப்படுத்துவது, விளம்பரங்களை மறுப்பது உள்ளிட்ட சட்டரீதியான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. மத்திய ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள் என்று தம்மை காட்டிக் கொள்ளும் ஒரு கும்பலோ, அரசையும் ஆளுங்கட்சியையும் விமர்சிக்கும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தேசவிரோத சக்திகள், அர்பன் நக்சல்கள், அன்னிய கைக்கூலிகள், நடுநிலை தவறியவர்கள் என்று  இட்டுக்கட்டிய பொய்களை பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். ஊடக விவாதங்கள் அனைத்திலும் தங்கள் தரப்பை இடம்பெறச் செய்யவேண்டும் என்று மிரட்டுவதும், விவாதப்பொருள் குறித்த அடிப்படையறிவுகூட இல்லாத பலரை நானாவிதப் பெயர்களில் உள்ளே நுழைப்பதும், விவாதங்களில் நெறியாள்பவர்களையும் கருத்தாளர்களையும் கண்ணியமற்ற முறையில் வசைபாடுவதுமாக இவர்களது சட்டப்பூர்வமற்ற அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக உலகளாவிய ஊடகச்சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142ஆவது இடத்தைப் பெற்று கீழிறங்கியுள்ளது. 

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் மத்திய அரசும் ஆளுங்கட்சியும்  தொடர்ந்து மேற்கொண்டுவரும் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்ற ஒரு கும்பல்தான் தமிழகத்தில் பெண் ஊடகவியலாளர்களை, கருத்தாளர்களை பாலினரீதியாக சிறுமைப்படுத்துகிறது. யுடியூப் வலைக்காட்சிப் பதிவர்களை திரட்டுகிறது. இப்போது நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது புகார் ஒன்றை அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளது. 

தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டதாக தம்பட்டமடித்துக் கொள்ளும் அந்தப் புகாரில் ஏராளமான பொய்களும் தகவல் பிழைகளும்  இருக்கின்றன என்பதற்கும் அப்பால், அதில் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கருத்தியல்கள் மீதான வெறுப்பும் இவற்றை தேசவிரோதம் என்று சித்தரிக்கும் மோசடியும் மலிந்துள்ளன. சில ஊடக ஆளுமைகளின் குடும்பப் பின்புலத்தை தவறாக தொடர்புபடுத்தி அவர்களது ஊடகச்செயல்பாடுகளின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கவும், நிர்வாகத்திடம் அவர்களுக்கு அவப்பெயர் உண்டாக்கவும், தங்களை விமர்சிக்கிற யாரும் பணியில் தொடர முடியாது என அச்சுறுத்தவும் இந்தப் பொய்ப்புகாரை இறக்கியுள்ள கும்பலுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறது. 

மத்திய ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு இப்படி ஊடகவியலாளர்களை மிரட்டிவருகின்ற அடாவடித்தனத்திற்கு எதிராக கண்டனம் எழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் தமுஎகச கேட்டுகொள்கிறது. இந்த அடாவடி கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுத்து ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமுஎகச வற்புறுத்துகிறது. 


அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர் ( பொறுப்பு )
 

ஆதவன் தீட்சண்யா,
பொதுச்செயலாளர்