ஜூன்-10
கொரானா நோய்த்தொற்றுக்கு ஆளாகி பலரும் அவதிப்பட்டு வரும் அஞ்சத்தக்க நிலையில் தமிழக அரசு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் மும்முரம் காட்டி வருவதை தமுஎகச எதிர்க்கிறது.
ஊரடங்குக்காலத்தின் பல்வேறு பாதகமான அம்சங்களால் தேர்வெழுதும் மனநிலையை இழந்து தவித்திருக்கும் மாணவர்களை தேர்வெழுத நிர்ப்பந்தம் செய்வதை அப்பட்டமான உளவியல் வன்முறையாகவே கருத வேண்டியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மூலம் சில தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவர்களை தயார்படுத்தியிருப்பதாக சொல்லிக் கொள்வதில் அடிப்படையிலேயே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதை அரசு கவனிக்கத்தவறுகிறது.
கற்கும் சூழலையும், சம வாய்ப்பையும், தேவைப்படுவோருக்கு சிறப்பு கவனத்தையும் செலுத்தி ஆயத்தப்படுத்தும் இயல்பான காலங்களில் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிட தேர்வும் ஒரு வழிமுறையாக இருக்கக்கூடும். ஆனால் இயல்புநிலை முற்றாக குலைந்து முன்னேற்பாடுகள் ஏதுமற்றுள்ள இந்த காலகட்டத்திலும் தேர்வை நடத்தித்தான் மாணவர்களை மதிப்பீடு செய்வோம் என்கிற அரசின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல.
கொரானா பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் சூழலில் நோய்த்தடுப்பு மற்றும் தற்காப்புக்கு போதிய ஏற்பாடுகள் இல்லாத நிலையில் சுமார் பத்து லட்சம் மாணவர்கள், தேர்வு நடத்தும் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை வெளிப்புழக்கத்திற்குள் தள்ளிவிடுவது அவர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டுகிறது தமுஎகச.
அசாதாரணமான இச்சூழலை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை நடத்தாமல் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க வேண்டும். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் எழுப்பிய இக்கோரிக்கை தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமுஎகச 2020 ஜூன் 10 அன்று சாத்தியமான இடங்களில் ஆற்றல்மிக்க வடிவங்களில் கவன ஈர்ப்பு இயக்கத்தை நடத்துகிறது. மாணவர்கள் நலனில் அக்கறை உள்ள யாவரும் இவ்வியக்கத்தில் பங்கெடுக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்