தமிழ்நாடு அரசு கடந்த 2009ஆம் ஆண்டு, தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த நலவாரியத்தில் புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர் மற்றும் அத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் புத்தகப் பதிப்பின் துணைத் தொழில்களான நூல் கட்டுமானம் செய்பவர்கள், கணினியில் தட்டச்சு செய்பவர்கள், லேமினேஷன் செய்பவர்கள், நோட்டுப் புத்தகங்கள், கட்டுனர் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட வாரிய உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம் 1982-ன் கீழ் வரும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அரசு முடிவு செய்து, நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவித்தொகைகள் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆணையிட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் நூலக ஆணையின் பேரில் பதிப்பகங்கள் நூல்களை அரசுக்கு அளிக்கும்போது பதிப்பகங்களுக்கு அளிக்கவேண்டிய தொகையில் 2.5% (இரண்டரை) சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு இந்த நலவாரியத்தின் நிதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக வழங்கபட்ட 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான நூலக ஆணைக்காக பதிப்பாளர்களுக்கு ஒருசில மாவட்டங்களிலிருந்தும் வழங்கப்பட்ட தொகையிலும் நலவாரியத்திற்காக 2.5% பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாதாரணமாகவே மார்ச், ஏப்ரல் மாதங்கள் பள்ளி மற்றும் கல்லூரித்தேர்வு காலமாகவும் தொடர்ந்து கல்வி நிலையங்களுக்கான விடுமுறைக்காலமாகவும் ஜூன் பள்ளித் திறப்புக் காலமாகவும் இருக்கும் என்பதால் பதிப்பகங்களும், புத்தக விற்பனை நிலையங்களும் அதிகம் விற்பனையற்ற மற்றும் பொருளாதார சுழற்சியற்ற காலமாகவும் அதனைச் சமாளிக்க வேண்டியிருக்கும். தற்போது கொரோனா ஊரடங்கு பாதிப்பின் காரணமாக பதிப்புத்துறையும், புத்தக விற்பனைத்துறையும் முழுவதுமாக முடங்கிப் போயிருக்கிறது. இதன் விளைவாக இவற்றில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் வாழ்வாதாரங்களும் முடங்கிப் போயுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் வரை தமிழகம் முழுதும் ( நெய்வேலி, ஒசூர், தருமபுரி, ஈரோடு, கரூர், கோவை, அரியலூர், தஞ்சாவூர், சேலம், மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், பழநி, செங்கல்பட்டு, மதுரை) நடைபெறும் புத்தகக்காட்சிகள் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. கண்காட்சி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருந்தாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊரடங்கில் மக்கள் செலவு செய்யும் சக்தியினை இழந்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.
சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கான ஆதாரங்களில் ஒன்றான புத்தகப் பதிப்புத்துறையையும் அதனைச் சார்ந்து இயங்கும் விற்பனைத் துறையினையும் மேலும் நலிவடையவிடுவதும், அதன் ஊழியர்களை வாழ்வாதாரம் இல்லாது தவிக்கும் நிலையில் விடுவதும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு மிகுந்த ஊறுவிளைவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
எனவே தமிழக மக்களின் அறிவார்ந்த நலன், பதிப்பகத் துறையின் சிறு குறு தொழில்கள் போன்ற தன்மை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்துள்ள நிதியோடு அரசும் தனது பங்காக சம அளவிலான நிதி ஒதுக்கி நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழக அரசை கோருகின்றது.
அன்புடன்
மதுக்கூர்இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
ஆதவன்தீட்சண்யா, பொதுச்செயலாளர்
17.04.2020