17 Dec 2019

குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பு ஆகியவை தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என அறிவிக்கக் கோரி. .

பெறுகை

திரு எடப்பாடி கே.பழனிசாமி
மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு

அய்யா, வணக்கம்.
பொருள்: குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பு ஆகியவை தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என அறிவிக்கக் கோருதல் - தொடர்பாக.  

தமிழகத்தின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகச்செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியில் தயாரிக்கப்படவிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து பின்வரும் கருத்துகளை உங்கள் கவனத்திற்கு முன்வைக்கின்றோம்.

1. குடியுரிமை திருத்தச்சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கும் வெகுமக்களின் நலன்களுக்கும் எதிரானது. 

2. அண்டைநாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத பிறமதத்தவர்க்கு குடியுரிமை வழங்கிட வழிவகுக்கும் இச்சட்டம், அண்டை நாடென இலங்கையைச் சேர்க்காததன் மூலம் அங்கிருந்து புலம்பெயர்ந்து கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஏதிலிகளாகவே இங்கு தங்கியுள்ள தமிழர்கள் இனியும்கூட குடியுரிமை பெறமுடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதேரீதியில் குடியுரிமை கோருவதற்கு தகுதியுடையோராக முஸ்லிம் மதத்தவர் சேர்க்கப்படாததால் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களும் குடியுரிமை பெற முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.  இத்தகைய பாரபட்சத்துடன் கூடிய இச்சட்டம் சர்வதேச மரபுகளுக்கு எதிரானது. 

3. நடைமுறைச் சாத்தியமற்ற சான்றாவணங்களைக் கோரி, ஏற்கனவே அஸ்ஸாமில் 19லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களை நாடற்றவர்களாக்கியுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இப்பதிவேடு கோரும் ஆவணங்களை அளிக்க முடியாதவர்கள் நாடற்றோர் என அறிவிக்கப்பட்டு, குடியுரிமை திருத்தச்சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்படுவர். ஆனால் இந்த வாய்ப்பினைப்பெற தகுதியுடையவர்களாக முஸ்லிம்களை குடியுரிமை திருத்தச்சட்டம் அங்கீகரிக்காததால் அவர்கள் குடியுரிமை பெறமுடியாதவர்களாகி, நாடற்றோருக்கான தடுப்பு முகாம்களில் அடைக்கப்படும் அவலநிலை உருவாகும். எனவே குடிமக்களில் ஒரு பகுதியினரை மதத்தின் பெயராலும் சான்றிதழ்களின் செல்லாத்தன்மையைக் கொண்டும் நாடற்றவர்களாக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்றது.

4. அஸ்ஸாமில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க 1200 கோடி ரூபாயும் பெரும் மனிதவுழைப்பும் செலவழிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாக நலிவுற்றுவரும் நிலையில் 4லட்சம் கோடி ரூபாயும் அளப்பரிய மனித ஆற்றலும் இத்திட்டத்திற்காக வீணடிப்பது அவசியமற்றது. இத்தொகையையும் மனித ஆற்றலையும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

5. தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேறியுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணி தொடங்குமானால் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தரும் மன அழுத்தத்திற்கும், நடைமுறை சார்ந்த கடும் அலைக்கழிப்புக்கும் மக்கள்  ஆளாவதுடன் சமூகத்தில் அமைதியின்மை உருவாகும் என்பதை நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் முன்னறிவிக்கின்றன. குடிமக்களின் இந்த நியாயமான கவலைகளை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களது இயல்பான வாழ்வையும் குடியுரிமையையும் பாதுகாக்கும் பொறுப்புடன் கேரளம், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களின் முதல்வர்கள் தமது மாநிலத்தில் அரசியல் சாசனத்திற்கு விரோதமான தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பையும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மதம் கடந்த மக்களின் ஒற்றுமையிலும் நலனிலும் அக்கறை கொண்டதும் அரசியல் சாசன மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதில் முன்னோடி மாநிலமுமான தமிழகத்திலும் இச்சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக முதல்வராகிய தாங்கள் அறிவிக்கவேண்டுமாய் கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.