12 Nov 2019

அயோத்தி தீர்ப்பு: நாட்டின் பன்முகத்தன்மையில் அரிமானத்தை ஏற்படுத்தும்.


எந்தவொரு  தீர்ப்பின் உள்ளுறையாகவும் நீதியே இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பை, பாப்ரி மசூதி நிலவுரிமை தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நிறைவேற்றத் தவறியிருக்கிறது என்று தமுஎகச கருதுகிறது. பாப்ரி மசூதி, வரலாற்றுரீதியாகவும் ஆவணங்களின் வலுவிலும் அனுபோகத்திலும் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியரது வழிபாட்டுடைமையாய் இருந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி மசூதியை இடித்த சங்பரிவாரத்தினர் மீதான குற்றத்தையும் தண்டனையையும் உறுதிப்படுத்துவதுடன், மசூதி இடிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் கூட அந்த நிலம் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட வகையில் இஸ்லாமியர்களுக்கே பாத்தியப்பட்டது என்றும்  இடிக்கப்பட்ட மசூதியை அரசே திரும்ப கட்டிக்கொடுக்கவேண்டும் என்றும் நீதிமுறைமையின் மீது நம்பிக்கை கொண்டோர் வைத்திருந்த எதிர்பார்ப்பிற்குப் புறம்பானதாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. மட்டுமல்ல, நிலத்தின் உரிமைதாரர்களான இஸ்லாமியரை அங்கிருந்து வெளியேற்றி, அத்துமீறி மசூதியை இடித்து ஆக்கிரமித்தவர்களுக்கே நிலத்தை பாத்தியப்படுத்திக் கொடுத்துள்ளதன் மூலம் இயற்கை நீதிக்கும் கூட எதிராக அமைந்துள்ளது இத்தீர்ப்பு.

பாபர் மசூதி கட்டி முடிக்கப்பட்ட கி.பி.1528 ஆம் ஆண்டு முதல் அந்த இடம் தொடர்பாக பெரிதாக சர்ச்சை ஏதும் உருவாகவில்லை.  மசூதி வளாகத்திற்குள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று இரவு அபிராம் தாஸ் என்பவரது தலைமையிலானவர்கள் கள்ளத்தனமாக ராமன் சிலையை வைத்தது முதலாக அந்த இடம் சர்ச்சைக்குரிய இடம் என்று வலிந்து சுட்டப்படும் நிலை உருவானது. அந்தச் சிலையை உடனடியாக அகற்றுவது தொடர்பாக அன்றைய மத்திய மாநில அரசுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள், சங்பரிவார அமைப்புகளுடன் நெருக்கமாய் இருந்த கே.கே.நாயர் என்ற அதிகாரி அரசின் வற்புறுத்தலையும் மீறி சிலையை அகற்றாமல் அங்கேயே இருக்கச் செய்தது, அதற்கு சன்மானமாக அவர் பின்னாளில் ஜனசங்கம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டது – ஆகியவை பற்றி இன்றைக்கும் காணக்கிடைக்கும் ஆய்வுத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கவில்லையோ என்று தமுஎகச கருதுகிறது. 
நம்பிக்கையின் பெயரால் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்று சொல்லிக்கொண்டே, ராமன் பிறந்த இடம் இதுவென்ற நம்பிக்கையின் பேரில் 1949ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வைக்கப்பட்ட ஓர் உருவச்சிலையை பாபர் மசூதி அமைவிடத்தின் ஒரு பங்குதாரராக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சரியல்ல என்று தமுஎகச கருதுகிறது. மசூதியை இடித்தவர்கள் செல்வாக்கு செலுத்தும் ஓர் அரசின் கீழ் இயங்கும் இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து வரலாற்றாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவந்துள்ளனர். மசூதிக்கு அடியிலுள்ள சிதைவுகள் இந்துக்கோவிலுக்கு உரியவை என்று இந்தியத் தொல்லியல் துறை நிரூபிக்காததை உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே குறிப்பிட்ட அந்த நிலப்பரப்பில் ராமன் பிறந்த இடம் இல்லை என்றாகிறது என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனக் கருதுகிறது தமுஎகச.

ராமன் கோவில் கட்டுமானப் பணிக்கான 60 சதம் வேலைகள் முடிந்து தயார் நிலையில் இருப்பதாக சங் பரிவார அமைப்புகள் அறிவித்து வந்த நிலையில் இந்தத் தீர்ப்பு இவ்வாறு வெளியாகியிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்கு இஸ்லாமியரிடமிருந்து எதிர்ப்பேதும் வராதபடி பலவாறாக முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். மிரட்டி இணங்கவைக்கும் இப்போக்கினால் தனித்துவிடப்பட்டவர்களாக தம்மை உணரும் நிலைக்கு ஆளாகியுள்ள அவர்கள் அயோத்தியைத் தொடர்ந்து இன்னும் எங்கெல்லாம் தமது வழிபாட்டுத்தலங்கள் சட்டரீதியாகவே பறிக்கப்படுமோ என்கிற அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாவதற்கு இத்தீர்ப்பு காரணமாகியுள்ளது.

இந்த நாட்டின் சமவுரிமை உள்ள குடிமக்களாக சுயமரியாதையுடன் வாழ்வதற்கான தமது எத்தனங்கள் தோற்கடிக்கப்பட்டு வருவது குறித்த தீராத உளைச்சலுக்கு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆளாகியுள்ள இக்காலத்தில் வெளியாகியுள்ள இத்தீர்ப்பு நாட்டின் பன்முகத்தன்மையில் ஏற்படுத்தும் அரிமானத்தை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் தமுஎகச கருதுகிறது.

மாற்றிடம் தரும் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரிப்பதென்றும், இத்தீர்ப்பின் மீது மறுசீராய்வு கோருதென்றும் இஸ்லாமியரிடையே கருத்து உருவாகி வருவதையும் நாம் கவனிக்க வேண்டும். அதேவேளையில், வழிபாட்டுரிமை பறிக்கப்பட்டுள்ள இஸ்லாமியச் சமூகத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாட்டின் பன்மைத்துவத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கையுள்ள அமைப்புகள் அனைத்தையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

சு.வெங்கடேசன், எம்.பி, மாநிலத்தலைவர்                            ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்