19 Jul 2019

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கைக்கு மோசடியாக பெறப்படும் ஒப்புதல் - தமுஎகச கண்டனம்

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கைக்கு மோசடியாக பெறப்படும் ஒப்புதல் - தமுஎகச கண்டனம்

தேசியக் கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கையை முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்பதே  தமுஎகச உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கை. இந்நிலையில் மத்திய அரசின் இந்த வரைவறிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவு இருப்பதாக பொய்க்கணக்குக் காட்டும் மோசடி தமிழக பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  ஆகியவற்றின் மூலமாக நடந்துவருகிறது. இதற்காக  பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும்  வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது.

நேற்று கோவையில் இப்படியொரு கூட்டம் நடப்பதாக தகவலறிந்து பெரியார் திக, பொதுப்பள்ளிக் கல்விக்கான மாநில மேடை, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் கூட்டம் கலைந்தது. இன்று திருச்சியில் ஊடகங்களுக்கோ கல்வியாளர்களுக்கோ சமூக ஆர்வலர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களையும் சில தலைமை ஆசிரியர்களையும் கொண்டு “தேசிய கல்விக்கொள்கை 2019 கருத்துக்கேட்பு பணிமனை” என்ற பெயரில் இதேபோன்ற கூட்டம் நடந்திருக்கிறது. தகவலறிந்து அங்கு சென்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டுமென வலியுறுத்தினர். இதையடுத்து “இது அலுவலர்களுக்கான கூட்டமே’’ என்கிற பொய்யுடன் கூட்டம் முடிந்தது. கல்வியாளர்கள் வெளிநடப்பு செய்து உண்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியுள்ளனர்.  

கோவை திருச்சி போலல்லாமல், மதுரையிலும் சென்னையிலும் கருத்துக் கேட்புக்கூட்டத்தை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களை அழைத்து வெளிப்படையாக நடத்தவேண்டும் என தமுஎகச தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
சு.வெங்கடேசன், எம்.பி, மாநிலத்தலைவர்              ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்