21 Jun 2019

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையைத் திரும்பப் பெற. .

பெறுகை

திரு கே.பி. அன்பழகன் அவர்கள்,
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர்

பொருள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையைத் திரும்பப் பெற தமிழகத்தின் சார்பில், ஜூன் 22 கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தக் கேட்டுக்கொள்ளுதல் - தொடர்பாக

மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு மட்டங்களிலும் விவாதங்களும்  கலந்தாய்வுகளும் நடந்துவருவதைத் தாங்கள் அறிவீர்கள். தமிழக அரசும் இது தொடர்பாகக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியுள்ளது. எமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அமைப்பும் இந்த வரைவறிக்கையின் மீது கடந்த ஜூன் 12 அன்று சென்னையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது. அதில் வெளிப்பட்ட கருத்துகள் ஊடகங்களில் செய்தியாகவும் வந்தன.
சமூக அக்கறையுள்ள கல்வியாளர்கள், கல்வியுரிமைப் போராளிகள், மாணவர் அமைப்பினர், ஆசிரியர் இயக்கத்தவர், சமூகச் செயற்பாட்டாளர்கள், கலை இலக்கியவாதிகள் பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டி, இந்த வரைவறிக்கையை மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்: 
1)    ஏற்கெனவே மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, அவசரநிலை காலத்தின்போது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது அதனை முற்றிலும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக மாற்ற இந்த வரைவறிக்கை வழி செய்கிறது.

2)   வரைவறிக்கையை இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்திலும் வெளியிட்டு, அதன் மீது பொதுமக்கள் கருத்துக் கூறுவதற்கான கால அவகாசத்தை குறைந்தது 6 மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

3)   மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு தேவையற்றது என்பதே தமிழக அரசின் கொள்கை. இந்த வரைவறிக்கையோ இளங்கலை, முதுகலை போன்ற கல்லூரிப்படிப்புகளுக்குக்கூட தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிறது. இது, சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களிள் மருத்துவக்கல்விக் கனவை மட்டுமல்லாமல், எந்தவொரு  பட்டப்படிப்புக் கனவையும் பொசுக்குகிற ஏற்பாடேயாகும்.

4)   3ஆம் வகுப்பு,  5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு ஆகியவற்றிலும் கூட பொதுத்தேர்வுகளைக் குழந்தைகள் எழுத வேண்டும் என்கிறது வரைவறிக்கை. இது குழந்தைகளின் கற்றல் முனைப்பையும் ஆர்வத்தையும் கிள்ளி எறிவதாக இருக்கிறது.

5)   கல்வியை முற்றிலுமாகத் தனியார் வியாபாரச் சரக்காக மாற்றுவதை இந்த வரைவறிக்கை சட்டப்பூர்வமாக்குகிறது.

6)   பள்ளி வளாகக் கல்வி என்ற பெயரில், கிராமப்பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. அருகமைப்பள்ளிகள் என்ற கோட்பாடு சிதைக்கப் பட்டு, அந்தக் குழந்தைகள் வெகுதொலைவு சென்று படிக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது இடைநிற்றல் அதிகரிப்பதற்கே இட்டுச் செல்லும்.

7)   பள்ளிகளுக்குள் தன்னார்வலர்களை அனுமதிப்பது என்ற பெயரில் உள்ளூர் மதவாத அரசியல்வாதிகள் பள்ளிகளுக்குள் புகுந்து குழந்தைகளின் நெஞ்சங்களில் மத, சாதியப்பகைமை உள்ளிட்ட நச்சுச் சிந்தனைகளை விதைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

8)   தமிழகம் உயர்த்திப் பிடித்து வந்துள்ள சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுகிறது இந்த வரைவறிக்கை.

9)   தாய்மொழி, ஆங்கிலம் இரண்டுமே நாடு முழுக்கப் போதுமானது. ஆனால் மூன்றாவது மொழி என்று திணிப்பதன் மூலம், குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான வேறொரு பாடத்தைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

10) மறைமுகமான இந்தித் திணிப்புக்கும், அதன் மூலமாக சமஸ்கிருதத் திணிப்புக்கும் வரைவறிக்கை வழி செய்கிறது. சமஸ்கிருதத்திறகு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாக, தேசியப்பெருமைகள் என்ற போர்வையில், ஒற்றை மத ஆதிக்கக் கருத்துகள் புகுத்தப்படவிருக்கின்றன. இது நாட்டின் மதச்சார்பின்மை மாண்புக்கும், பன்முகப் பண்பாட்டுச் செழிப்புக்கும் குழிபறிப்பதாகும்.
ஆகவே, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ  நிலைபாடுகளுக்கு எதிரான, மாநில உரிமைகளுக்கு எதிரான புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும் என, ஜூன் 22, 20 அன்று தலைநகர் தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கூட்டியுள்ள மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தின் சார்பில் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாய் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இங்ஙனம்,
சு. வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்