தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பாதுகாத்து வைத்திருக்கும் கீழடி உண்மையை வெளிவராமல் புதைப்பதற்குப் பண்பாட்டு ஆதிக்க அமைப்பாகிய ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் மத்திய அரசு ஏற்படுத்திய தடைகள் வரலாற்றாளர்களால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது தெரிந்ததே. ஆனாலும் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் கீழடி அகழாய்வுக் கண்காணிப்பாளருமான கி. அமர்நாத் ராமகிருஷ்ணன், அந்த ஆய்வின் முக்கியக்கட்டத்தில் இங்கிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு மத்திய அரசால் தூக்கியடிக்கப்பட்டார். இது தொடர்பான பொதுநல வழக்கில் 2019 மார்ச் 15 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அமர்நாத் ராமகிருஷ்ணனை மறுபடியும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பொறுப்பாளராக இடம் மாற்றுவதற்கு ஆணையிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் கீழடி கிராமத்தில் வைகை நதிக்கரையில் தழைத்திருந்த ஒரு தொன்மையான நாகரிகத்தைக் கண்டறிய இட்டுச்சென்ற அகழ்வாய்வு நடைமுறைகளில் மத்திய அரசு பெரும் அக்கறையையும் முனைப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு கூறியுள்ளது. அத்துடன், “இந்த ஆராய்ச்சி நிறைவடையும்போது தமிழர் நாகரிகப் பெருமையை உலகமே அங்கீகரிக்கும், ஆனால் இப்பிரச்சினையில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது எங்களுக்கு வியப்பளிக்கிறது,” என்றும் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
கீழடி உண்மைகளை மறைக்கும் சதிகளை எதிர்த்தும், தமிழர் தொன்மைக்கான தடயங்கள் மக்கள் முன் வைக்கப்படவும் போராடி வந்திருப்போருக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதான இந்தத் தீர்ப்பினை, இதற்காக பல்வேறு போராட்டங்களையும் சென்னையில் சிறப்பு மாநாட்டையும் நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பாராட்டி வரவேற்கிறது. தீர்ப்பினை காலதாமதமின்றிச் செயல்படுத்தவும், அகழ்வாய்வு எவ்வித முட்டுக்கட்டையுமின்றித் தொடரவும், ஆய்வு முடிவுகள் விரைவில் உலக மக்கள் முன்பாக வைக்கப்படவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தமிழக அரசும் இதில் முறையாகத் தலையிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது.
சு.வெங்கடேசன், மாநிலத் தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்