23 Oct 2018

மீ-டூ இயக்கம்

பாலியல் துன்புறுத்தலுக்கெதிரான மீ-டூ எனப்படும்  ‘நானும்’ இயக்கம் பத்தாண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, கடந்த ஓராண்டாக இந்தியாவில் பற்றிக்கொண்டு இப்போது தமிழகத்தில் பரவத் துவங்கியிருக்கிறது. “நான் வெளியில் சொல்ல வெட்கப்படவில்லை” ”நான் தனியாக இல்லை” என்கிற இரு வாசகங்களை முழக்கமாக உயர்த்திப்பிடித்த இந்த இயக்கத்தில் இவ்வளவு பெண்கள் இணைந்து குரல் கொடுப்பார்கள் என இதைத் துவக்கியவரான தரான புர்க் அன்று எண்ணியிருக்கமாட்டார்.

மீ-டூ இயக்கத்தை முன்னெடுப்பவர்களோடு நாங்கள் நிற்கிறோம் என்கிற ஒருமைப்பாட்டை 16.10.18 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த தமுஎகச, பாலியல் வன்முறைக்கு எதிரான இந்த இயக்கத்தை பெண் விடுதலையின் பிரிக்க முடியாத பகுதியெனக் கருதி நீட்டி வரவேற்கிறது.

மனத்தடைகளை உடைத்துப் பெண்கள் தங்களுக்கு  நடந்த கொடுமைகளைப் பேச வாய்ப்பளிக்கும் ஒரு ‘வெளி’யாக இந்த இயக்கம் நிச்சயம் பயன்படும். ஆண்மையவாதத்தால் பீடிக்கப்பட்ட இச்சமூகத்தில், பாலியல் துன்புறுத்தலுக்காளான பெண்களின் குரல்கள் முதலில் கேட்கப்படவேண்டும் என்பதுதான் முக்கியம். சட்டரீதியான நடவடிக்கை என்பது அடுத்த கட்டமே. பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி, நம்பிக்கையுடன் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடத்தக்க முறையில் சட்டநடைமுறைகள் எளிதாக்கப்படவேண்டும், பரவலாக்கப்பட வேண்டும் என தமுஎகச கோருகிறது. இந்தியாவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால் மானநட்ட வழக்குப் போட முடியும் என்கிற வாய்ப்பே பெண்களைப் பேசவிடாமல் தடுக்கும் ஆயுதமாக மாறிவிடாமல் உரிய சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அரசியல்ரீதியான பழிவாங்கல் மற்றும் பல உள்நோக்கங்களுடன் எவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டை வைத்துவிட முடியும். அதன் வழியே ஒரு ஆணின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்யமுடியும் என்கிற சாத்தியம் இருக்கிறதுதான். தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை’ நீக்கவேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பான ஒரு நியாயமற்ற நிலைப்பாட்டை இதிலும் நம் சமூகம் எடுத்துவிடக்கூடாது. அப்படியும் சில வரக்கூடும் என்கிற புரிதலுடன் நாம் பெண்களின் குரல்களைச் செவிமடுப்போம்.

தனிப்பட்ட மற்றும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிலைப்பாடு எடுக்காமல், பன்னெடுங்காலம் பேசப்படாத வாழ்வின் வலிமிகுந்த ஒரு பகுதி இப்போது பேசப்படுகிறது என்கிற ஆதரவான மனநிலையுடன் சாதி, மத, அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு இதை அணுகவேண்டும் என்கிற வேண்டுகோளை தமுஎகச நம் சமூகத்தின் முன்வைக்கிறது.

தன்னுரிமைக்கு பங்கமின்றியும், தன் உடல் மற்றும் உணர்வுகள் மீது முழு அதிகாரம் கொண்டவர்களாகவும்  பெண்கள் வாழ்வதற்கு உகந்ததாக சமூக மதிப்பீடுகளை மாற்றியமைக்கும் கருத்தியல் போராட்டத்தை சமரசமின்றி நடத்தவேண்டியது அவசியம் என்கிற செய்தியை மீ-டூ இயக்கத்திலிருந்து தமுஎகச எடுத்துக் கொள்கிறது. பெண் விடுதலைக்கான எந்தவொரு நகர்விலும் இணைந்து நிற்கும் தமுஎகச, அதே நோக்கத்திற்காக மீ-டூ இயக்கத்திலும் தனக்குரிய பொறுப்பினை நிறைவேற்றும்.

சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்,                        ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்