21 Aug 2018

கவிஞர் மனுஷ்யபுத்திரன், பேரா.சுந்தரவள்ளி ஆகியோரை மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை தேவை

கவிஞர் மனுஷ்யபுத்திரன், பேரா.சுந்தரவள்ளி ஆகியோரை மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை தேவை

தேசியப்பேரிடர் என்னும்படியாக உயிரிழப்புகளையும் பொருட்சேதங்களையும் வாழ்வாதாரங்களையும் அழித்தபடி கேரளத்தில் மழையும் வெள்ளமும்  அதிகரித்துவந்த நிலையில் அம்மக்களை மீட்பது பற்றிய தவிப்பு உலகளாவிய அளவில் வெளிப்பட்டது. மக்களின் வாழிடங்களைப் போலவே, சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டிடங்களும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. எல்லாவற்றையும் அறிவியல் பார்வை துளியுமற்று மதம், சாதியடிப்படையிலான குறுமதியோடு அணுகும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இந்த அழிவுக்கும் அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கிற்கும் தொடர்புள்ளதா என நீதிமன்றம் ஆராயவேண்டும் என்கிற குதர்க்கமான கருத்தை முன்வைத்தார்.

மாதவிடாய் மூலம் பெண்கள் தீட்டாகிவிடுவதாகவும் ஆகவே அவர்களை கோவிலுக்குள் அனுமதித்தால் கோவிலின் புனிதம் பாழ்பட்டுப்போகும் என்றும் பாலின அடிப்படையில் பெண்களுக்கு வழிபாட்டுரிமையை மறுத்துவரும் நிலைக்கு ஆதரவாகவும் கேரள மக்கள் இத்தகைய அழிவுக்கு ஆளாகத் தகுந்தவர்கள்தான் என்கிற பொருளிலும் தெரிவிக்கப்பட்ட இக்கருத்து மனிதத்தன்மையுள்ள அனைவரது கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் ஆளானது. கேரள மக்களுக்கான மீட்புப்பணிகளிலும் நிவாரணம் வழங்குவதிலும் போதிய அக்கறை காட்டாமல் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று மத்திய அரசின் மீது வலுப்பட்டு வந்த கண்டனத்தை திசைதிருப்புவதற்காகவும் கூட அவர் அய்யப்பன், தீட்டு, சாபம் என்று கிளப்பிவிட்டார் என்கிற குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை.

மாதவிடாய் பற்றிய குருமூர்த்தியின் அபத்தமான கருத்தும், கேரள மக்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்புகள் குறித்த ஆற்றாமையும் உண்டாக்கிய அழுத்தமே கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஊழியின் நடனம் என்கிற கவிதையை எழுதுவதற்கு தூண்டுதலாகவும் பின்புலமாகவும் இருந்திருக்கக்கூடும். ஆனாலும்  அக்கவிதை  பெண்ணின் பேராற்றலை பாடுபொருளாகக் கொண்டதேயன்றி ஹெச்.ராஜா என்பவர் கெடுநோக்கம் கற்பித்து கூறுவது போல இந்து பெண் கடவுளர் எவரையும்  இழிவுபடுத்தவில்லை. ஆயினும், இக்கவிதைக்காக  மனுஷ்யபுத்திரன் மீது ஆங்காங்கே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டு பலரையும் தூண்டிவிட்டுள்ளார். மேற்படி ராஜாவால் தூண்டப்பட்டவர்கள், மனுஷ்யபுத்திரனை தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக மிரட்டி வருவதோடு அவதூறும் செய்துவருகின்றனர். இதனால் மனவுளைச்சலுக்கும் அவமதிப்புக்கும் ஆளான மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 20.08.18 அன்று காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

தமுஎகச மாநில உதவிச்செயலாளர் பேரா.சுந்தரவள்ளி “தனது கோவிலையே காப்பாற்றிக்கொள்ள துப்பில்லாத அய்யப்பனுக்கு தீட்டு ஒரு கேடா” என்று முகநூலில் எழுதிய பதிவும் கூட குருமூர்த்தி வகையறாவின் ஆணாதிக்க- மூடக்கருத்துக்கு பெண்ணென்ற வகையிலும் பகுத்தறிவாளர் என்ற தெளிவிலுமான எதிர்வினைதான். ஆனால் இந்த எதிர்வினைக்காக சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து மக்கள் முன்னணி என்கிற அமைப்பினர் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

“… எல்லாவற்றிலும் ஆபாசத்தை மட்டுமே பார்க்கும் உணர்ச்சியற்றவர்களின் பார்வையைக் கொண்டு இதை மதிப்பிடக்கூடாது; இதை மதிப்பிடுகிறவர் நூலாசிரியர் உண்மையிலேயே எதைச் சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்துகொள்ள, அவருடைய இடத்தில் தன்னை இருத்திக்கொண்டு பார்த்துவிட்டு, அதன் பிறகு இந்த நூல் சென்றடையும் வாய்ப்புள்ள ஒவ்வொரு வயதையும் சேர்ந்த வாசகரின் இடத்தில் தன்னை இருத்திக் கொண்டு பார்த்த பின்னர், அதன் பிறகே விருப்புவெறுப்பற்ற ஒரு முடிவுக்கு வரவேண்டும்…” என்று பெருமாள் முருகன் வழக்கின்போது சென்னை உயர் நீதிமன்றத்தால் மேற்கோள் காட்டப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மனுஷ்யபுத்திரனின் கவிதைக்கும் சுந்தரவள்ளியின் பதிவுக்கும் பொருந்தக் கூடியதே. “ஒவ்வொரு மாற்றுக்கருத்திற்குப் பின்னாலும் அபாயத்தை மட்டுமே காண்கின்ற ஒருவரின் கருத்தோட்டத்திலிருந்து அல்லாமல் நியாயமான, மனவுறுதியும், திடசிந்தனையும் கொண்ட ஒருவரின் கருத்தோட்டத்திலிருந்தே ஒரு நூலை நாம் சோதிக்கவேண்டும்” என்கிற தீர்ப்புரை வாசகங்கள் ராஜா வகையறாவினரின் வாதங்களை எடுத்தயெடுப்பில் நிராகரிக்கப் போதுமானவை.

“கற்பனையான கதாபாத்திரங்களைக் கொண்ட எந்தவொரு கவிதை, நாடகம் அல்லது நாவல் ஆகியவற்றில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது அவதூறு என்ற அம்சத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்... கருத்துரிமை பேச்சுரிமை ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் மிகுந்த மதிப்பிற்குரிய ஒன்றாக உள்ளன. மாறுபட்ட கருத்து அல்லது கருத்து மாறுபாடு என்பது மதிக்கப்பட வேண்டும் என்பதோடு ஜீரணிக்கப்பட முடியாத விமர்சனத்தால் அது தடுக்கப்படக்கூடாது. மாறுபட்ட வகையிலான, கடுமையான கருத்து வெளிப்பாடுகளும் வெளிப்படையான கருத்துகள் என்ற வகையிலேயே நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதென்பது ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்…” என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஆதாரத்தில் மனுஷ்யபுத்திரன், சுந்தரவள்ளி ஆகியோரது கருத்துரிமையை பாதுகாப்பதற்கு காவல்துறையும் அரசும் முன்வரவேண்டும். அதன்பொருட்டு, மனுஷ்யபுத்திரன் கொடுத்துள்ள புகாரின்பேரில் ஹெச்.ராஜா வகையறா மீது காவல்துறை வழக்கு பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுஎகச கோருகிறது. 

பெருமாள்முருகன் பிரச்னையில் கருத்துரிமை பற்றிய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை பொருத்திப் பார்த்தால், பேரா.சுந்தரவள்ளி மீது இந்து மக்கள் முன்னணி வி.ஜி.நாராயணன் கொடுத்துள்ள புகாரானது சட்டவிரோதமானது. இதற்காக வி.ஜி.நாராயணன் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், பரபரப்புக்காகவும் குறுகிய ஆதாயங்களுக்காகவும் சாதி, மதம், இறை நம்பிக்கை ஆகியவற்றின் பெயரால் மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கும் கும்பல்களுக்கு தக்க பாடமாக அமையுமென தமுஎகச வலியுறுத்துகிறது.   

சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்