4 Apr 2018

மாணவி சோபியா கைதுக்கு தமுஎகச கண்டனம்

மாணவி சோபியா கைதுக்கு தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கனடாவில் ஆய்வுசெய்து வரும் மாணவி சோபியா, “பாசிச பாஜக ஒழிக!” என்று முழக்கமிட்டதால் ஆத்திரமடைந்த பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், அவரை மிரட்டியதோடு, அவதூறாக பேசியுள்ளார். மேலும், தனது கட்சியினரைத் தூண்டிவிட்டதன் அடிப்படையில், சோபியா மற்றும் அவரது பெற்றோர்களை பாஜக-வினர் ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

மேலும் காவல்துறையிடம் தமிழிசை அளித்த புகாரின் பேரில், மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மாணவி சோபியாவை உடனடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், சோபியாவின் தந்தை டாக்டர் ஏ.ஏ.சாமி அளித்த புகார் மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்களுக்கு பொதுமேடையில் பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுத்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மீது பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகச் சித்தரித்து இழிவுபடுத்திய வழக்கில் அவரது முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த போதும், அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. ஆனால் தமிழிசையின் புகாரின் பேரில் உடனடியாக மாணவி சோபியாவை கைது செய்துள்ள தமிழகக் காவல்துறையின் விசுவாசம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாடு முழுவதும் இடதுசாரி மற்றும் தலித் அறிவுஜீவிகள் கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் தமிழகத்திலும் இத்தகைய அராஜகம் அரங்கேறியுள்ளது. 

மாணவி சோபியாவின் தந்தை அளித்துள்ள புகார் அடிப்படையில் தமிழிசை மற்றும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். நீட் திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, எட்டுவழிச்சாலை, கருத்துரிமைப் பறிப்பு, இந்தி- சமஸ்கிருதத் திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம் என தமிழகத்தை வஞ்சித்து வரும் பாசிச பாஜக மீதான, தமிழக மக்களின் இயல்பான மன உணர்வை வெளிப்படுத்திய மாணவி சோபியா மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.  கருத்துரிமையைக் கருவறுக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு எதிராக படைப்பாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உரத்துக் குரல் எழுப்பவேண்டும் என்று தமுஎகச கேட்டுக் கொள்கிறது.

சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்