17 May 2021

தமுஎகச மாநிலச் செயற்குழுக்கூட்டம் – முடிவுகள்

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச்செயற்குழுக் கூட்டம் 2021 மே 16 அன்று இணையவழியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத்தலைவர்(பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்: 

முதலமைச்சர் பொது நிவாரண நிதி: கொரானா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமையை பகிர்ந்துகொள்ளும் பொருட்டு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்யவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள் நியாயமானதே. மக்களின் இன்னல் துடைக்கும் பணிகளில் எப்போதும் முன்வரிசையில் செயலாற்றும் தமுஎகச, முதலமைச்சரின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. இதன்பொருட்டு தமுஎகச   உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பங்களிப்பை நல்குவதுடன் தமக்கு தொடர்புடைய நல்லுள்ளங்களிடமிருந்தும் இயன்ற நன்கொடையைத் திரட்டி 2021 மே 31ஆம் தேதிக்குள் தமுஎகச அறக்கட்டளையின் கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு மாநிலச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த நன்கொடை நமது அறக்கட்டளையின் கணக்கிலிருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும். நன்கொடை அனுப்பிட:

Trust for the Welfare of Tamilnadu Progressive Writers Artists Association,

Bank of Maharastra, SB Ac.No: 603 4349 5676

IFSC: MAHB0000458 Pudhucherry

தோழர்களே, நம் காலத்தின் பேரழிவாம் கொரானாவிலிருந்து மக்களின் உயிரைக் காப்பதற்கான போராட்டத்தில் நாம் நன்கொடை ஈந்தும் பங்கெடுப்போம். 

தமுஎகச விருதுகள் 2019 விழா தமுஎகச விருதுகள் 2019 வழங்கும் விழாவையும் மாநிலக்குழுக்கூட்டத்தையும் கம்பம் நகரில் நடத்திட செய்யப்பட்ட ஏற்பாடுகளை இரண்டுமுறை ஒத்திவைக்கவேண்டியதாகிவிட்டது. ஊரடங்கின் காரணமாக மேலும் காலதாமதமாகி வருவதால் விருது வழங்கும் விழாவை இணையத்தில் நடத்திமுடிப்பதென செயற்குழு முடிவெடுத்துள்ளது. விருதுபெற்ற நூல்கள் பற்றின கருத்தமர்வுகளை 2021 ஜூன் 5,6 தேதிகளில் இருபகுதிகளாக இணையவழியில் நடத்திவிட்டு, விருதுத்தொகையையும் சான்றிதழையும் அஞ்சலில் அனுப்பி வைப்பது. 

விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட நூல் பற்றி அந்தந்த நடுவர்குழுவின் சார்பில் யார் பேசுவதென இறுதிப்படுத்தி  22.05.21 தேதிக்குள் தெரிவிக்கவும், அழைப்பிதழை இறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

மாநிலக்குழுக்கூட்டம்: நோய்த்தொற்றின் தீவிரம், ஊரடங்கின் நிலையைப் பொறுத்து மாநிலக்குழுக்கூட்டத்தை ஜூன் மாதத்தில் இணையவழியிலேயே நடத்துவது.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி: பொதுமுடக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசின் உதவியைக் கோரும் அதேவேளையில் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் உள்ளூர் அளவில்  அவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்யுமாறு கிளைகளும் மாவட்டக்குழுக்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.