16 May 2021

தமுஎகச செயற்குழு தீர்மானங்கள்

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச்செயற்குழுக் கூட்டம் 2021 மே 16

 அன்று இணையவழியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத்தலைவர்(பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

1. தமது உரிமைகளையும் வாழ்வாதரங்களையும் பண்பாட்டு வளமைகளையும் மீட்டுக்கொள்ளும் பெருங்கிடக்கையின் வெளிப்பாடாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியுள்ள தமிழ்நாட்டின் மக்களுக்கு தமுஎகச மாநிலச் செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது. 

2. கடும் எதிர்ப்புக்கிடையில் எதேச்சதிகாரமாக ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கையை நிராகரிப்பது, மாநிலத்திற்கான கல்விக்கொள்கையை வகுப்பது என திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையை மக்கள் தமது தீர்ப்பின் மூலம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று அறிவித்திருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வரவேற்கிறது. 

தேசிய கல்விக்கொள்கையை நிராகரிப்பது என்கிற இந்த சரியான முடிவின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கான கல்விக்கொள்கையை வகுத்தளிப்பதற்கான ஆணையம் ஒன்றை தாமதமின்றி அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை தமுஎகச வலியுறுத்துகிறது.

3. தேசிய கல்விக்கொள்கையை ஏற்கமுடியாது என்று தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், இக்கொள்கையை செயற்படுத்துவது தொடர்பாக மாநிலக் கல்வித்துறை செயலாளர்களின் கூட்டத்தை நடத்தப்போவதாக ஒன்றிய கல்வியமைச்சர் அழைப்பு விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைப் புறந்தள்ளிவிட்டு அதன் அலுவலர்களை நேரடியாகச் சந்தித்து தனது நோக்கங்களுக்கு இசைவாக ஏவிவிடப் பார்க்கும் ஒன்றிய அரசின் இந்த அத்துமீறல் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் என்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 

4. திருவிழாக்கள், பண்டிகைகள் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகள் நிகழும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் தான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நிகழ்த்துக் கலைஞர்களுக்கும் நிகழ்ச்சிகள் கிடைக்கும் காலமாகும். இந்த நிகழ்ச்சிகளில் ஈட்டும் தொகைதான் அவர்களது வாழ்வாதாரத்தின் பெரும்பகுதியாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கொரானா ஊரடங்கின் காரணமாக இக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராயுள்ளவர்கள், பதிவு செய்யாமல் விடுபட்டிருப்பவர்கள், வாரியத்தில் பதியும் வரம்புக்குள் வராத கலைஞர்கள் அனைவருக்கும் இந்த மூன்றுமாதங்களுக்கான வாழ்வூதியம் தரப்பட வேண்டும். கொரானாவால் உயிரிழந்த கலைஞர்களின் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு துயர்துடைப்பு நிதி வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.  

5. 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பெருந்தொகை சேமிப்பாக உள்ளது. கடந்த ஆண்டின் பொதுமுடக்கக் காலத்தில் பதிப்புத்துறை சார்ந்தவர்களுக்கு இந்தத்தொகையிலிருந்து நிதியுதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய அரசு பரிசீலிக்கவேயில்லை. மீண்டும் பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்துள்ள இப்போதைய நிலையில் இந்த நலவாரிய நிதியிலிருந்து பதிப்புத்துறையினருக்கு வாழ்வாதார நிதியுதவியை பகிர்ந்தளிக்க வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்